
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் தங்கு விடுதியில் பெரம்பலூர், சிதம்பரம் கடலூர் மண்டல காங்கிரஸ் கமிட்டி மாவட்ட, ஒன்றிய,நகர, கிராம கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கடலூர் மாவட்டத் தலைவர் திலகர் தலைமை தாங்கினார். மண்டல மேலிட பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ முருகானந்தம், சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பாளர், அரியலூர் மாவட்ட சந்திரசேகர், மாநில நிர்வாகி மணிரத்தினம், வக்கில் சந்திரசேகர், குறிஞ்சிப்பாடி தொகுதி பொறுப்பாளர் ஏ.என் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி விஷ்ணு பிரசாத், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார். கூட்டம் மூன்றாவது மாடியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்வதற்காக அங்குள்ள லிப்டில் எம்பி விஷ்ணு பிரசாத், மாவட்டத் தலைவர் திலகர், ரமேஷ், கிருஷ்ணதாஸ், சந்திர கோதண்டபாணி, வடலூர் நகர தலைவர் பலராமன் ஆகியோர் சென்றனர். அதில் ஐந்து பேர் மட்டும் செல்லக்கூடிய லிப்டில் எம்பி உட்பட 6 நிர்வாகிகள் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று லிப்ட் பழுதாகி நின்றது. இதில் அதிர்ச்சி அடைந்த எம்பி மற்றும் உடன் இருந்த நிர்வாகிகள், லிப்டில் சிக்கிக்கொண்டு கத்தி கூச்சலிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்து லிப்டின் உள்ளே இருந்த சந்திர கோதண்டபாணி, பலராமன் இரண்டு பேரும் மயங்கி கீழே விழுந்தனர். இதனைக் கண்டு அருகில் இருந்த எம்பி விஷ்ணு பிரசாத், மருத்துவர் என்பதால் அங்கேயே அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
உடனடியாக விடுதி ஊழியர்கள் நிர்வாகிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் லிப்ட்டை இயக்க முயன்ற போது அது சரி செய்ய முடியவில்லை. பின்னர் இது குறித்து குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையில் ஜெயமணி, ராஜசேகர், ராஜேஷ், சுரேந்தர் ஆகிய தீயணைப்பு வீரர்கள் மற்றும் வடலூர் போலீசார்கள் விடுதிக்கு வந்தனர். பின்னர் கடப்பாரை கொண்டு ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு லிப்டை உடைத்து எம்பி விஷ்ணு பிரசாத் மற்றும் நிர்வாகிகளை மீட்டனர். அதன் பின்னர், வடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர். இதனால் அப்பகுதியில் உள்ள கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.