Mourning poetry for silampoliyaar

- ஈரோடு தமிழன்பன்

இலக்கியத்தில்

இனி மாரிக்காலம் இல்லை

மேடைகள் விழாக்கள்

கருப்புடை தரித்தன

கண்ணீர்விட்டன.

இன்குலாப் என்னும்

சுடுசூரியன்

ஒருநாள்விழுந்தான்

அப்துல்குமான் என்னும்

கவிதைப் பவுர்ணமி

ஒருநாள்

விழுந்தான்

தமிழ்மண்

தாங்கமுடியாமல்

தவித்தது

இன்று

சிலம்பொலி விழுந்தார்

வானமே

விழுந்துவிட்டது.

யார் எமைத்

தூக்கி நிறுத்துவார்?

நூறு காவிய

அடர்வனங்கள்

தீப்பற்றி எரிகின்றன

ஐயனே!

சிலம்பொலியே!

எங்கே போனீர்கள்?

உமக்குள் எமக்கான

வள்ளுவர் இருந்தார்

இளங்கோ அடிகள்

இருந்தார்

பாரதிதாசன் இருந்தார்

உம்

ஒற்றை மரணத்தில்

ஓராயிரம் இழப்புகள்!

குற்றாலம்

வற்றியபோது

உன்னிம்தானே

தண்ணீர் யாசகம்

கேட்டது!

குன்றூர்க்குக்

குளிர் அதிகமெனில்

உன்னிடம்தானே

வெப்ப ஒப்பந்தம் போட்டது.

ஆயிரம் பல்லாயிரம்

தமிழ்க் கவிதைகளுக்கு

உன் மூளைதானே

பாதுகாப்புப் பெட்டம்!

உமக்குள்

ஒரு புலவன் இருந்தான்

ஒரு

புரவலனும் இருந்தான்

ஒருசேர இருவரும்

புறப்பட்டுப் போனது எங்கே?

மாதங்களை

ஆண்டுகள் அடித்துத் தின்னுமோ?

மரணத்திற்கென்ன

அப்படிப் பாழான பசி?

உன்னை வாரிக்கொண்டு போக

மூப்பு

காரணமா?

தமிழ்தானே உன்னிடம்

மூத்திருந்தது

தமிழுக்கேது மரணம்?

காலத்திற்கு

நாட்குறிப்பெழுதும்

பழக்கம் இருப்பின்

இன்றைய நாளைத்தான்

இறந்த நாளாகத்தான்

எழுதிவைக்கும்.