
கொடைக்கானல் மேல் மலை கிராமத்தில் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 13 பேர் பலியானதைத் தொடர்ந்து வெளியாட்கள் மலை கிராமத்துக்குள் வர மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல், மேல் மலை பகுதிகளான கூக்கல், போளூர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்மக் காய்ச்சல் பரவிவருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக அவர்களுக்கு இதுபோன்ற காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து சுகாதாரத்துறையினர், காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களுக்கு மாத்திரைகள் வழங்கிச் சென்றனர்.
கிராமத்தில் சுகாதார நிலையம் இல்லாததால், அவர்கள் மன்னவனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாததால் அவர்களால் ஆஸ்பத்திரிக்குச் செல்ல இயலவில்லை. இந்த நிலையில், கிராமத்தைச் சேர்ந்த பஞ்சரத்தினம், பட்டம்மாள், வீரம்மாள், நாட்ராயி உட்பட 4 பேர் நேற்று (27.05.2021) ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த மர்மக் காய்ச்சலுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தக் கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் முகாம்கள் அமைத்து மருத்துவக் குழுவினர் சோதனை நடத்திவருகின்றனர்.
இதுகுறித்து டாக்டர் அரவிந்தன் தெரிவிக்கையில், “கூக்கல் உள்ளிட்ட கிராமங்களில் மர்மக் காய்ச்சல் பரவிவருகிறது. மருத்துவக் குழுவினர் அமைத்து இவர்களுக்கு எந்தவித காய்ச்சல் என ஆய்வு செய்துவருகிறோம். பலர் தங்கள் வீடுகளிலேயே கசாயம் காய்ச்சிக் குடித்து, வீடுகள் முன்பு வேப்பிலை கட்டி வைத்துக்கொண்டு முகாமுக்கு வர மறுக்கின்றனர். அவர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இது சம்பந்தமாக மலை கிராம மக்களிடம் கேட்டபோது, “கொடைக்கானல் மலை கிராமங்களில் புதுவிதமான காய்ச்சல் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இதனால் காய்ச்சல் பரவியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே வெளியாட்கள் ஊருக்குள் நுழையக் கூடாது என வலியுறுத்தி நுழைவுவாயிலில் தடுப்புகள் அமைத்துள்ளோம். மேலும், உயிர்பலி அதிகரிப்பதற்குள் டாக்டர்கள் உரிய சிகிச்சையை உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க வேண்டும்” என்று கூறினார்கள். இப்படி கொடைக்கானல் மேல்மலை பகுதியில் மர்மக் காய்ச்சலுக்குப் பலர் பலியாகிவருவது கண்டு கோடை வாழ் மக்கள் பெரும் பீதியில் இருந்துவருகிறார்கள்.