
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22/11/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரியும் நா.கனகராஜ், இன்று (22/11/2021) காலை கரூர்- திருச்சி நான்கு வழிச்சாலையில் வாகன தணிக்கை பணியிலிருந்தபோது எதிர்பாராத வகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நா.கனகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிலிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த நா.கனகராஜின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 50 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு முதலமைச்சர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.