Mother's unethical act A child born to a girl

Advertisment

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சந்தையூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு வரைபடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சந்தையூர் பகுதிக்கு கூலி தொழிலாளியாக அங்கு வந்து பணிபுரிந்துள்ளார். இவருக்கும், அந்த பகுதியில் உள்ள 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தினால் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி அன்று அந்த சிறுமி பேரையூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை அரசு மருத்துவர்கள், காவல்துறையினருக்கு தெரிவித்தனர். அதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும், சிறுமியும்ஆண் குழந்தையும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அந்த சிறுமி, குழந்தையுடன் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த தகவல் சந்தையூர் ஆரம்ப சுகாதாரத்துறை நிலையத்தை சேர்ந்தசெவிலியர் காந்திமதிக்கு தெரியவந்தது. இதையடுத்து, செவிலியர் காந்திமதி சிறுமியின் வீட்டுக்கு சென்று குழந்தையை பற்றி விசாரித்துள்ளார். மேலும், அந்த குழந்தையைப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த சிறுமி, ‘குழந்தை என்னிடம் இல்லை என் தாயிடம் கொடுத்து விட்டேன்’ என்று கூறியுள்ளார். மேலும், குழந்தை குறித்த தகவலை முன்னுக்கு பின் முரணாகத்தெரிவித்துள்ளார்.

Advertisment

இதில் சந்தேகமடைந்த செவிலியர் காந்திமதி, பேரையூர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், குழந்தையை காணவில்லை என்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், சிறுமியின் தாய்க்கும், மெய்யனூத்தம்பட்டியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (48) என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இந்த இருவரும் உசிலம்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வாயிலாக குழந்தையை விற்க முடிவு செய்துள்ளனர். அதன் பின், இவர் மூலம் ஈரோட்டில் திருமண தகவல் மையம் நடத்தி வந்த கார்த்திக் என்பவரை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்து குழந்தையை கொடுத்துள்ளனர்.

கார்த்திக், அந்த குழந்தையை பெங்களூரில் உள்ள கார்த்திகேயன் (50), சீனிவாசன் (38) ஆகியோர் மூலம் பெங்களூரில் கண் பார்வை இழந்த தேஜஸ்வரி (36) என்பவருக்கு ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். தேஜஸ்வரிக்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவருக்கு ஆண் குழந்தை இல்லாத காரணத்தினால் பச்சிளம் குழந்தையை விலை கொடுத்து வாங்கியுள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாயார், சுந்தரலிங்கம், தேஜஸ்வரி, பெங்களூர் கார்த்திக், சீனிவாசன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.