/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ashwini_17.jpg)
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள புல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு, ராம்குமார் என்ற நபரோடு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு, நான்கு வயதில் லக்ஷ்மன்குமார் மற்றும் ஒன்றரை வயதில் புனித்குமார் ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
இதற்கிடையில், 6 மாதங்களுக்கு முன்பு, திவ்யா மற்றும் ராம்குமார் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, தனது கணவரைப் பிரிந்து புல்லாபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் திவ்யா தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் திவ்யா, இன்று (21-12-24)வீட்டை உள்புறமாக பூட்டிவிட்டு ஒன்றரை வயதான புனித்குமாரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, லக்ஷ்மன்குமாரின் கழுத்தை அறுத்து, தன் கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ஒன்றரை வயது புனித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதையடுத்து, படுகாயமடைந்த லக்ஷ்மன்குமார் மற்றும் திவ்யா ஆகியோரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து ஒன்றரை வயது குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திவ்யா கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)