/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/418_10.jpg)
கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்திற்குப்பயிற்சிக்காகச் சென்ற தனது மனைவி சுபஸ்ரீ(34) காணவில்லை என திருப்பூரைச் சேர்ந்த அவரது கணவர் பழனிகுமார்(40) போலீசில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், “கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி காலை 6 மணிக்கு எனது மனைவி ஒரு வார யோகா பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஈஷா யோகா மையத்தில் விட்டுச் சென்றேன். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து சம்பவத்தன்று (18.12.2022) எனது மனைவியைக் கூட்டிச் செல்வதற்காக சென்றபோது, பயிற்சி முடிந்து அனைவரும் காலையிலேயே சென்றுவிட்டனர் என்று ஈஷா யோகா மையத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். எனது மனைவி எங்குசென்றார் என்று தெரியவில்லை. அக்கம்பக்கத்தில் எல்லாம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், எனது மனைவி சுபஸ்ரீயை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போன சுபஸ்ரீ கோவை செம்மேடு பகுதியில் விவசாயகிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது கையில் இருந்த ஈஷா யோகா மையத்தின் மோதிரத்தை வைத்து மீட்கப்பட்ட உடல் சுபஸ்ரீ தான் என்று அவரது கணவர் பழனிகுமார் உறுதி செய்தார். அதன் பின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சுபஸ்ரீயின் தாயார், “நான் பெற்ற பிள்ளை கோழையில்லை. அவள் தைரியசாலியான பெண். அவளாகப் போய் சாகும் அளவிற்கு கோழை இல்லை. என் மகள் எப்படி இறந்தால் என்பதையே அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை. இனிமேலாவது விசாரணை செய்து சொல்லுங்கள். துக்கம் விசாரிக்க வருபவர்களிடம் இப்படித்தான் இறந்தார் எனநான் பதில்சொல்லுவேனே. இப்பொழுது எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. எப்படி செத்தார் எனக் கேட்கின்றனர். நான் என்ன சொல்லுவேன். எனக்குத்தெரியவில்லை என்றுதான் நான் சொல்கிறேன்” எனக் கண்ணீர் மல்கக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)