
திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் திருமணமாகி மூன்று வருடங்களான பெண் இரண்டரை வயது குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வீரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருச்சி வண்ணாங்கோவில் பகுதியைச் சேர்ந்த சிவில் சப்ளையில் பணியாற்றக்கூடிய ஜெயச்சந்திரன் என்பவரோடு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இன்று ஜெயச்சந்திரன் பணிக்கு சென்றிருந்த நிலையில், மதியம் 1 மணியளவில் வீட்டிற்குள் அனைத்து கதவுகளும் தாழிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி பிரியா மற்றும் தன்னுடைய இரண்டரை வயது குழந்தை நட்சத்ரா தீக்குளித்து இறந்து உள்ளனர். வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த புகையை பார்த்து அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
வீட்டின் அறைக்குள் அளவுக்கு அதிகமான புகை சூழ்ந்து இருந்ததால் சில மணிநேரத்திற்குப் பிறகு அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த ராம்ஜி நகர் காவல் துறையினர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், முதற்கட்டமாக பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஒன்று எழுதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தொடர் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.