
சேலத்தில், தனது ஒரே மகன் திருநங்கையாக மாறியதால் ஊராரின் கேலிக்குப் பயந்து தாயாரே ஆள் வைத்து அடித்துக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் கண்ணகி தெருவைச் சேர்ந்த பிரகாஷ் மனைவி உமாதேவி (45). இவர்களுடைய மகன் நவீன்குமார் (19). கருத்து வேறுபாட்டால் கணவர், பல ஆண்டுகளுக்கு முன்பே உமாதேவியை பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு அவர், வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு, மகனைப் படிக்கவைத்து ஆளாக்கினார். நவீன்குமாரின் பேச்சு, நடவடிக்கைகளில் பெண்களைப் போல சில மாற்றங்கள் தென்பட்டது. இந்நிலையில், திடீரென்று அவர், கடந்த மே மாதம் வீட்டைவிட்டு வெளியேறினார். மகனைக் காணவில்லை என உமாதேவி சூரமங்கலம் காவல் நிலையத்தில் அப்போது புகார் அளித்திருந்தார்.
ஜூலை மாதம் நவீன்குமாரை பெங்களூருவில் இருந்து மீட்டுக்கொண்டு வந்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரோ, தான் திருநங்கையாக மாறி தனது பெயரை அக்ஷிதா என மாற்றிக்கொண்டதாகவும், 18 வயது பூர்த்தியான மேஜர் என்பதால் சுய விருப்பத்தின் அடிப்படையில் வாழ விரும்புவதாகவும், தனது தாயாருடன் செல்ல விரும்பவில்லை என்றும் கூறி, பெங்களூருவுக்கே திரும்பிச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த நவம்பர் மாதம் நவீன்குமார் சேலத்தில் உள்ள தாயாரைப் பார்க்க பெண்களைப் போல உடை அணிந்துகொண்டும், சிகை அலங்காரம் செய்துகொண்டும் வந்திருந்தார். இதைப் பார்த்த சிலர் உமாதேவியை கேலி பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து உமாதேவி, அவருக்குத் தெரிந்த ஜாகீர் அம்மாபாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷின் உதவியை நாடியுள்ளார். அவரோடு விழுப்புரத்தில் திருநங்கையாக மாறியவர்களுக்கு ஆண்களுக்கான ஹார்மோன் ஊசி போட்டு மீண்டும் முழுமையான ஆணாக மாற்றும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், நவீனின் கை, கால்களை முறித்துப் போட்டுவிட்டால் அவனால் எங்கும் தப்பிச்செல்ல முடியாது என்றும், எலும்பு முறிவுக்கு சிகிச்சை என்ற பெயரில் நவீன்குமாரை விழுப்புரத்திற்கு அழைத்துச்சென்று ஹார்மோன் ஊசி போட்டுவிடலாம் என்றும் யோசனை கூறியுள்ளார்.
இந்த யோசனைக்கு ஒப்புக்கொண்ட உமாதேவி, இதற்காக வெங்கடேஷ் (46), அவருடைய கூட்டாளிகள் கார்த்திகேயன் (25), சந்தோஷ் (29), சிவக்குமார் (31), காமராஜ் (40) ஆகியோருக்கும் சேர்த்து கைச்செலவுக்காக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அவர்கள் அனைவரும் சேர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உமாதேவியின் வீட்டில் வைத்து நவீன்குமாரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். அப்போது அவர் திடீரென்று பேச்சு மூச்சின்றி மயக்கம் அடைந்தார்.
காயமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் விசாரித்தபோது, வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டதாகவும், அதனால் மூர்ச்சையாகிவிட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நவீன்குமார் உயிரிழந்தார். இதையடுத்து சந்தேக மரணமாக வழக்கைப் பதிவுசெய்த சூரமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர், இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போதுதான் மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காமல் பெற்ற தாயே ஆள்களை வைத்து இரும்பு கம்பியால் தாக்கி மகனைக் கொலை செய்திருக்கும் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது.
இதையடுத்து உமாதேவி, வெங்கடேஷ், காமராஜ் உள்ளிட்ட 6 பேரையும் காவல்துறையினர் டிச. 18ஆம் தேதி இரவு கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் உமாதேவி, சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும், மற்ற ஐந்து பேரும் ஆத்தூர் மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டனர்.