Mother-in-law Torcher: Teen passes away with her two sons!

Advertisment

சேலம் அருகே, மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த இளம்பெண் தன் இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் அருகே உள்ள வீராணத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (44). சொந்தமாக நான்கு லாரிகள் வைத்திருக்கிறார். அத்துடன் மணல் வியாபாரமும் செய்து வருகிறார். இவருடைய மனைவி குறிஞ்சித்தமிழ்(29). இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு விமல் (7), கார்த்திக் (4) என இரண்டு மகன்கள் உள்ளனர். வீட்டின் முதல் தளத்தில் ராஜேஷ் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். தரை தளத்தில் அவருடைய தாயார் முத்தம்மாள், தந்தை ராமன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.

மார்ச் 16ஆம் தேதியன்று, ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்த ராஜேஷ், மாலையில் வீடு திரும்பினார். மேல் தளத்தில் உள்ள தன் வீட்டுக்கதவைத் தட்டினார். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கே ஒரு அறையில் தனது மனைவியும், இரண்டு மகன்களும் தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ராஜேஷ்.

Advertisment

இதுகுறித்து வீராணம் காவல்நிலையக் காவல்துறைக்குத்தகவல் அளிக்கப்பட்டது. நிகழ்விடம் விரைந்த காவல்துறையினர், சடலங்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Mother-in-law Torcher: Teen passes away with her two sons!

குறிஞ்சித்தமிழின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் நசியனூர் ஆகும். இச்சம்பவம் குறித்து அவருடைய பெற்றோருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மகளும், பேரன்களும் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து கதறி அழுதனர். அப்போது அவர்கள், ராஜேஷ்தான் தங்களது மகளை அடித்துக் கொலை செய்து விட்டதாகக் கூறினர். அவரைக் கைது செய்யாமல் சடலங்களை உடற்கூராய்வு செய்யக்கூடாது என்று கூறி, காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். எதுவாக இருந்தாலும் விசாரித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உறுதி அளித்ததை அடுத்து, குறிஞ்சித்தமிழின் பெற்றோர் சமாதானம் அடைந்தனர்.

Advertisment

இது ஒருபுறம் இருக்க, குறிஞ்சித்தமிழின் கணவர் ராஜேஷ், கணவரின் பெற்றோர் முத்தம்மாள், ராமன் ஆகியோரை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. மாமியார் முத்தம்மாளுக்கும், குறிஞ்சித்தமிழுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்ட குறிஞ்சித்தமிழ், ஈரோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கேயே சில மாதங்கள் தங்கி விட்டார். பின்னர் அவரை ராஜேஷ் சமாதானப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்.

அதன்பின்னும் குறிஞ்சித்தமிழ் செய்கின்ற வேலைகளில் அடிக்கடி மாமியார் குற்றம் கண்டுபிடித்து தகராறு செய்துள்ளார். இந்த நிலையில்தான் சம்பவத்தன்று குழந்தைகளை படிக்கச் சொல்லி இருக்கிறார். அவர்கள் படிக்காமல் அடம் பிடிக்கவே, அவர்களை அடித்துள்ளார் குறிஞ்சித்தமிழ். குழந்தைகளை எப்படி அடிக்கலாம் என்று கேட்டு மாமியார் அவருடன் தகராறு செய்திருக்கிறார். அப்போது அங்கு வந்த ராஜேஷூம் தாயாருக்கு ஆதரவாக குழந்தைகளை அடிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.

கணவரும், மாமியாரும் ஒரே பக்கமாக நின்று பேசியதால் குறிஞ்சித்தமிழ் மேலும் விரக்தி அடைந்தார். அப்போது கோபத்தில் அவர், இனிமேல் எங்களால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. நாங்கள் இருக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். மனைவி ஏதோ கோபத்தில் கத்துகிறார் என்று கருதிய ராஜேஷ் வெளியே சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியிருக்கிறார். அப்போதுதான் மனைவியும், குழந்தைகளும் சடலங்களாக கிடப்பது தெரிய வந்துள்ளது என்கிறார்கள் காவல்துறையினர்.

மேல் தளத்தில் ராஜேஷூம், அவருடைய மனைவியும் சிரித்துப் பேசினாலே முத்தம்மாளுக்கு பிடிக்காது என்றும், உடனடியாக மகனைக் கீழே வருமாறு தாயார் அழைத்து விடுவார் என்றும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெற்றெடுத்த தாயாருக்கு ஆதரவாக பேசுவதா, பாசம் வைத்துள்ள மனைவிக்கு ஆதரவாக இருப்பதா என்று தெரியாமல் ராஜேஷூம் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்து வந்துள்ளார் என்றும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில்தான் குறிஞ்சித்தமிழ் தற்கொலை முடிவெடுத்திருக்கிறார். தான் இல்லாவிட்டால் குழந்தைகள் கஷ்டப்படுவார்களே என்று நினைத்து முதலில் இரு குழந்தைகளையும் மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு கொன்றுவிட்டு, அருகில் உள்ள மற்றொரு கொக்கியில் சேலையால் தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தைகளை கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வீராணம் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.