
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி சாத்தமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, மாதா கோவில் திருவிழாவிற்கு ரேடியோ சவுண்ட் சர்வீஸ் வேலைக்காக வந்த அரசக்குழி கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரது மகன் அஜித்(25) என்பவர், சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சிறுமியின் தாயார் காலையில் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. இதுகுறித்து அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாயார், காணாமல்போன தன் மகளைக் கண்டுபிடித்து, கடத்திச் சென்ற அஜீத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் அஜித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், அஜித்தின் செல்ஃபோன் நம்பரை பின்தொடர்ந்த விருத்தாசலம் காவல்துறையினர், தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அஜித் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருப்பதைக் கண்டுபிடித்து, அவரைக் கைதுசெய்தனர். மேலும், அந்தச் சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, கைதுசெய்த அஜித்தை விருத்தாசலம் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்று அதிகாலை பணியில் இருந்த காவலர்களின் கவனக்குறைவைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அஜித், காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினார். இதனைத் தொடர்ந்து, தீவிரத் தேடுதலில் ஈடுபட்ட போலீசார், அஜித்தை மீண்டும் கைதுசெய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.