/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4114_1.jpg)
கடலூரில் அடித்துக் கொல்லப்பட்ட நான்கு வயது பெண் குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்தபடி தாய் ஒருவர் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூரைச் சேர்ந்த பாலமுருகன்-பச்சையம்மாள் என்ற தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ளது. பாலமுருகனுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொன்னதால் பச்சையம்மாளின் உறவினர் ஜீவா என்பவர் பச்சையம்மாள் மற்றும் மூன்று குழந்தைகளை தான் பார்த்துக் கொள்வதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திண்டிவனம் அழைத்துச் சென்றுள்ளார்.
திண்டிவனத்தில் உள்ள ஜீவாவின் வீட்டில் பச்சையம்மாள் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பாலமுருகனின் உறவினருக்கு போன் செய்த பச்சையம்மாள், நான்கு வயது பெண் குழந்தை இறந்துவிட்டது. நாங்கள் அனைவரும் கடலூருக்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகனின் உறவினர்கள் நேற்று இரவு முழுக்க கடலூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.
ஆனால் யாரும் வரவில்லை. இதனால் கடலூரின் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்பொழுது உழவர் சந்தை அருகே இறந்த குழந்தையை தோளில் சுமந்து கொண்டு பச்சையம்மாளும் மற்ற இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர். குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. உடனடியாக அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தை இறந்தது உறுதி செய்யப்பட்டது.
பச்சையம்மாள் மற்றும் இரண்டு குழந்தைகளிடம் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜீவா தான் குழந்தையை கொலைசெய்திருக்க வேண்டும் என பாலமுருகனின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். போலீசாரின் முழு விசாரணைக்கு பிறகே இந்த சம்பவத்தின் முழு பின்னணி தெரியவரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இறந்த குழந்தையை தாய் தோளில் சுமந்தபடி சுற்றிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)