/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2-2_54.jpg)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ளது நாச்சுலியேந்தல் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அழகேஸ்வரன் - இந்திரா தம்பதி. இவர்களுக்கு தமிழரசி, கலையரசி என இரண்டு மகள்களும், அலெக்ஸ் பாண்டியன் என்கிற ஒரு மகனும் இருக்கின்றனர். 28 வயதான இவர், போர்வெல் இயந்திரம் வைக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். அதே சமயம், சகோதரிகள் இரண்டு பேருக்கும் திருமணமான நிலையில், திருமணம் ஆகாத அலெக்ஸ் பாண்டியன் தன்னுடைய தாய் இந்திராவுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதியன்று அலெக்ஸ் தனது வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்குத்திரும்பியுள்ளார். அந்த சமயம், அலெக்ஸ் பாண்டியன்வீட்டின் உள்ளே இருக்கின்ற ஹாலில் படுத்துக்கொண்டிருந்த நிலையில், அவரது வீட்டுக் கதவும் திறந்து கிடந்துள்ளது. அப்போது, திடுதிப்பென உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை எடுத்து, அலெக்ஸ் பாண்டியனைசரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலும், ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மகனைப் பார்த்து அலறிய இந்திரா, கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அலெக்ஸின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு, அலெக்ஸின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலெக்ஸின் தாயாரான இந்திராவுக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றது. ஆனால், அத்தகைய சொத்துக்கள் ஆண் வாரிசான அலெக்ஸ் பாண்டியனுக்கு கிடைக்கக் கூடாது என தகராறு செய்து வந்துள்ளனர். அதே சமயம், அலெக்ஸ் பாண்டியனுக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு இருப்பதால், அந்த சொத்துக்கள் நம்மை விட்டு போய்விடும் என அவருடைய சகோதரிகள் கருதியதாகத்தெரிகிறது. இதையடுத்து, அந்த சொத்துக்களை பெண் பிள்ளைகள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என திட்டம் தீட்டி, அலெக்ஸ் பாண்டியனை அவரது உடன் பிறந்த சகோதரிகளும், தாய் இந்திராவும் சேர்ந்து கூலிப்படையை விட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதைக்கேட்டு ஆடிப் போன போலீசார், இச்சம்பவத்திற்கு காரணமான தாய் இந்திரா மற்றும் இரண்டு மகள்களை கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கூலிப்படையை சேர்ந்த வினித், விஜயகுமார், வெங்கடேஸ்வரன் உள்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சொத்துக்காக பெற்ற மகனையே கொலை செய்த தாயின் செயல்காரைக்குடி மக்களை குலை நடுங்க வைத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)