ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த தஞ்சாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கவுசல்யா (26). இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். கடந்த இரண்டு வருடமாக கவுசல்யா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். முத்துசாமி அவ்வப்போது தனது மனைவி, மகனைப் பார்த்து வந்துள்ளார். கவுசல்யாவின் தாய், மகள் மற்றும் மருமகனிடம் கவுந்தப்பாடியில் போய் குடியேறுமாறு அறிவுறுத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று கவுசல்யாவின் தாய் மற்றும் அவரது அண்ணன் வெளியே சென்று விட்டனர். வீட்டில் கவுசல்யா மற்றும் அவரது 2 வயது மகன் மட்டும் இருந்தனர். வெளியே சென்ற அவரது தாய் மற்றும் அண்ணன் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் வெளியே கவுசல்யா மகன் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தான். வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அவரது தாய் கதவைத் தட்டி உள்ளார். ஆனால் பதில் வரவில்லை. உள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கவுசல்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கு மாட்டித்தொங்கிக் கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு வெள்ளோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கவுசல்யா இறந்துவிட்டதாகத்தெரிவித்தார். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.