பிறந்த நேரம் சரியில்லை என 4 மாத குழந்தையைக் கொன்ற தாய் கைது!

 Mother arrested for BABY incident in pazhani

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் குழந்தை பிறந்த நேரம் சரியில்லாததால் பிரச்சனை ஏற்படுவதாக சொன்ன ஜோசியரின் பேச்சைக் கேட்டு தாய் தான் பெற்ற 4 மாத குழந்தையைக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பழனி அருகே உள்ள ராசாபுரம் ஊராட்சி இரண்டாவது வார்டை சேர்ந்தவர்கள் மகேஷ்வரன்-லதா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தையும், பிறந்து நான்கே மாதமான ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நேற்று மகேஷ் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் தாய் லதா நான்கு மாத குழந்தை கோகுலுடன்வீட்டிலிருந்துள்ளார்.கழிவறைக்குச் சென்று வந்த நேரத்தில் குழந்தையை காணவில்லை என லதா அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். பிறகு குழந்தையை உறவினர்கள் சேர்ந்து தேடிய நிலையில் அருகிலிருந்த ஆற்றின் கரையில் செடிகளுக்கு நடுவே குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே குழந்தையின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதன்பின் தாலுகா போலீசார் குழந்தையின் பெற்றோரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையின் தாய் லதா முன்னுக்குப்பின் முரணான தகவலை அளித்த நிலையில், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைக்கு உங்கள் மகன் பிறந்த நேரம் சரியில்லாததே காரணம் என ஜோசியர் கூறியதை கேட்ட தாய் லதா, கொடூர மனதுடன் பெற்ற நான்கு மாத மகனை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. தற்பொழுது கொடூர தாய் லதாவை போலீசார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

incident pazhani police
இதையும் படியுங்கள்
Subscribe