புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி புளியஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் மைசூர் ரகுமான் அவரது மனைவி ஜகுபர் நிஷா (23). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 40 வது நாளில் குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வு முடிந்து நேற்று தான் ஜகுபர் நிஷா வந்துள்ளார். மைசூர் ரகுமான் தனது உறவினர் கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று இரவு 9.30 க்கு மேல் ஜகுபர் நிஷா வீட்டில் இருந்து முனகல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது ஜகுபர் நிஷா இடுப்பிற்கு மேலே 3 இடங்களுக்கு மேல் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் ஜகுபர் நிஷா பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து அவரது கணவர் அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். தனியாக வீட்டில் இருந்த பெண்ணை கத்தியால் குத்திக் கொன்று விட்டு தப்பிச் சென்றது யார்? வெளி நபர்கள் வந்திுந்தால் ஜகுபர் நிஷாவின் கதறல் சத்தம் வெளியில் கேட்டிருக்குமே என்றும் விசாரணை செய்து வருகின்றனர். வீட்டில் உள்ளவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இளம்பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.