Skip to main content

இரவு பணி காவலர்களுக்கு சொந்த செலவில் கொசு பேட் வழங்கிய எஸ்.பி.

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

 

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  அருண் சக்திகுமார் பதவியேற்ற நாளில் இருந்து மாவட்ட அளவில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். சிறிய ஓய்வு நேரங்களை குடும்பத்தினருடன் செலவு செய்யுங்கள் என்று காவலர்களை குடும்ப உறுப்பினர்களை பார்க்க அனுப்பினார். டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை கடந்து மது விற்பனைக்கு தடை, ஏழைகளை வதைத்த லாட்டரிச் சீட்டுகளுக்கு தடை, மணல் திருட்டு முடக்கம் என்று பல்வேறு அதிரடிகளை செய்து மாவட்ட மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். காலை நேரங்களில் வாக்கிங் என்ற பெயரில் ஒரு நாளைக்கு ஒரு பகுதியாக தினமும் 3 கி மீ வரை நகர்வலம். குற்றச் செயல்கள் நடக்கும் பகுதிக்கு நகர் வலம் சென்று வருவதால் அடியோடு மறைந்தது.

 

Mosquito bat - police - sp -



இந்தநிலையில் தான் இரவில் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றி வந்தவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முக்கிய இடங்களில் இரவு நேர பணியில் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அந்தந்த பகுதியில் பணியில் இருக்கும்போது கொசு தொல்லையால் அதிகம் அவதிப்பட்டு வந்தனர். 
 

இரவு காவலில் கண்விழ்த்திருப்பவர்களுக்கு கொசுக்கடி பெரிய சவாலாக இருப்பதை நேரில் பார்த்து உணர்ந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், தனது சொந்த செலவில் ரூபாய் 800 மதிப்புள்ள 50 எலெக்ட்ரானிக்  கொசு பேட்களை  வாங்கித் இரவு காவலுக்குச் செல்லும் காவலர்களுக்கு வழங்கியுள்ளார்.


 

எங்களின் மனநிலையை அறிந்து கொசுக்கடியால் அவதிப்படுவதைப் பார்த்து மனிதநேயத்தோடு எஸ்.பி. கொசு பேட் சொந்த பணம் ரூ 40 ஆயிரம் செலவு செய்து வாங்கி கொடுத்திருக்கிறார்.  இதனால் இரவு பணியில் உள்ள காவலர்கள்  மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றனர் நெகிழ்ச்சியோடு.
 

ஒவ்வொரு உயர் அதிகாரியும் தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் நிலையை உணர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.