/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk_0.jpg)
அதிமுகவின் வங்கி கணக்குகளை சசிகலா, தினகரன் ஆகியோர் பார்க்க ஆட்சேபம் குறித்து மனுவாக தாக்கல் செய்ய அதிமுகவுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 12ம் தேதி சென்னை வானகரத்தில் அ.தி.மு.க (அம்மா, புரட்சி தலைவி அம்மா ) அணிகள் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கட்சியின் மூன்று வங்கி கணக்குகளை கையாளவும் தடை விதிக்க வேண்டும் எனவும்; கட்சியின் ஆவணங்களை கையாள தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவின்படி, அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம், கட்சியின் கணக்கு வழக்குகளை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.
கடந்த முறை இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மகாலிங்கம் தாக்கல் செய்த கணக்கு விவரங்களை தரவேண்டுமென சசிகலா தரப்பிலும்; ஆனால் அனுமதிக்க முடியாது என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இவற்றை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக கணக்கு தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை மனுவாக தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி வழக்கை மார்ச் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)