
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (17.11.2021) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்துவரும் நிலையில், நாளை சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடப்பட்டுள்ளது. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து வரும் நிலையில், வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு இடையே கடந்து செல்லும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.
சேலம், அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பொழியும். நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. நாளை 18ஆம் தேதி சென்னைக்கு 'ரெட் அலர்ட்' விடப்படுவதாகச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
பொதுவாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் தற்போதைய தேதிவரை தமிழ்நாட்டில் இயல்பாகக் கிடைக்கும் வடகிழக்கு பருவமழையின் அளவு 29 சென்டிமீட்டர். ஆனால் இந்தமுறை 44 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 54 சதவீதம் அதிகம். அதேபோல் சென்னையைப் பொறுத்தவரை, வழக்கமாக அக்டோபர் 1 முதல் தற்போதைய தேதிவரை 45 சென்டிமீட்டர் மழை பொழியும். ஆனால் இம்முறை 82 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 67 சதவீதம் அதிகமாகும்.