
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. இத்தகைய சூழலில் தான் கோவை, நீலகிரி ஆகிய இரு மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது, நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிரதான சுற்றுலா தலங்கள் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாத காலத்தில் நாடு முழுவதும் 106 சதவீதம் பதிவாகக்கூடும். தமிழகத்தில் வட மற்றும் தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.