More than a crore scam in pawn jewelery case! Customers besieging the bank!

கடலூர் மாவட்டம், மங்களூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட (கனரா) வங்கியில் அதனை சுற்றியுள்ள 25 கிராமங்களை சேர்ந்தவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கியில் சிறுபாக்கம் பகுதியைச் சேர்ந்த நமச்சிவாயம்(59), அவரது மகன் சங்கரன்(37) ஆகிய இருவரும் நகை மதிப்பீட்டாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

Advertisment

இவர்கள் இருவரும் வங்கியில் நகைக் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை மீட்க பணம் செலுத்த வரும்போதும், நகைக்கடனை புதுப்பிக்கும் போதும் பணத்தை பெற்றுக்கொண்டு ரசீது வழங்கி, பின்னர் நகைகளை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதுபோல் பல நாட்களாக தொடர்ந்து இருந்ததால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினம் வங்கி மேலாளரிடம் முறையிட்டனர். அப்போதுதான் நகை மதிப்பீட்டாளர்கள் வழங்கியது போலி ரசீது என்பதும், நகை கடனுக்கு வாடிக்கையாளர்கள் செலுத்திய அசல் மற்றும் வட்டி பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஒன்றுசேர்ந்து வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் நேற்று இரண்டாவது நாளாகவும் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை திருப்பித் தருமாறு முழக்கம் எழுப்பினர்.

இதனிடையே 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் புகார் அளித்தனர். அதையடுத்து நேற்று உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த நகை மதிப்பீட்டாளர்கள் நமச்சிவாயம், சங்கரன் ஆகியோரை போலீசார் வங்கிக்கு அழைத்து வந்தனர். அவர்கள் இருவரிடமும் வங்கி மேலாளர் ராஜேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், “வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டும் ஒரு கோடிக்கு மேல் கையாடல் செய்துள்ளனர். எனவே இதுதொடர்பாக நகை மதிப்பீட்டாளர்களிடம் உரிய விசாரணை நடத்தி பணம் மற்றும் நகையை திருப்பி தர வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.