Skip to main content

ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 50க்கும் மேற்பட்ட பயணிகள்!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

More than 50 passengers survived by driver's ingenuity

 

கும்பகோணத்திலிருந்து அரியலூர் சென்ற தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநரின் திறமையால் பெரிய அளவில் ஏற்படவிருந்த உயிர் சேதம் தடுக்கப்பட்டிருப்பதாக பேருந்தில் பயணித்தவர்கள் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களாக டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள், விளைநிலங்கள், சாலைகள் என பரவலாக வெள்ள நீர் சூழ்ந்து பொது மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

 

இந்த நிலையில், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரியலூருக்குச் சென்றிருக்கிறது. சோழபுரத்தைத் தாண்டி பேருந்து வழக்கம்போல் வேகமாக வந்துகொண்டிருந்தது. திருப்பனந்தாளுக்கும் சோழபுரத்திற்கும் இடையே உள்ள திருவாய்பாடியில் பயணிகள் பேருந்துக்காக நிற்பதைக் கவனித்த ஓட்டுநர் பிரேக்கில் கால்வைத்திருக்கிறார். அப்போது பேருந்தின் பிரேக் பிடிக்காததைக் கண்டு நிலைகுலைந்தவர், மிக சாதூர்யமாக பெரிய விபத்து ஏற்படாமல் சாலையின் ஓரத்தில் இருந்த வயலுக்குள் இறக்கி பயணிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்.

 

More than 50 passengers survived by driver's ingenuity

 

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அந்தவழியாக சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வயலில் சாய்ந்து நின்ற பேருந்தைப் பார்த்து, பதறித்துடித்து, அங்கிருந்தபடியே போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்ததோடு, காயமடைந்த பயணிகளை உடனே மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கவும் செய்தார். இதுகுறித்து பேருந்தில் பயனித்த பயணி ஒருவர், “கும்பகோணம் முதல் விக்கிரவாண்டி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கிறது. அதனால் சாலைகள் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அதோடு தொடர்ந்து மழைபெய்ததால் மோசமான நிலைக்கு மாறியிருக்கிறது.

 

தனியார் பேருந்துகள் தங்களுக்கு வழங்கப்பட்ட டைமிங்கிற்காக வழக்கமான வேகத்திலேயே செல்கின்றன. அப்படித்தான் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டதிலிருந்து வேகமாகவே வந்துகொண்டிருந்தது. திருவாய்பாடி வரும்போது பயணிகள் நிற்பதை அறிந்து பிரேக் போடுவதற்கு முயன்றார். ஆனால் தொடர் மழையால் பிரேக் பிடிக்கல, இதனை அறிந்த நாங்கள் கூச்சலிட்டோம், சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதினாலோ அல்லது எதிரே வரும் பேருந்தில் மோதினாலோ பெரிய ஆபத்தாகிவிடும் என கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்து வயலுக்குள் இறக்கி 50 பேர் உயிரைக் காப்பாற்றினார்” என அதிர்ச்சி விலகாமல் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்