/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dmk 005.jpg)
சென்னை அண்ணா அறிவாலயத்தில், கையாலாகாத அதிமுக ஆட்சியில் படுகொலையாகும் மக்கள் பறிபோகும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் இன்று காலை நடந்தது. சபாநாயகராக சக்கரபாணி பொறுப்பேற்று மாதிரி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினார்.
இதில் பேசிய தங்கம் தென்னரசு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதாக சொல்கிறார்கள். ஆனால் எங்களுக்கு 30, 40 பேர் பலியானர்கள் என்று தகவல்கள் வருகிறது. இந்த படுகொலைகளுக்கு முக்கிய காரணம், மூலக்காரணம் உளவுத்துறை. உளவுத்துறை முற்றிலும் செயலிழந்து உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நீண்ட நாட்களாக நடைபெறுகிறது. அதற்கென ஒரு வரலாறு உண்டு. 99 நாட்கள் முடிந்து 100வது நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலம் நோக்கி ஒரு அமைதிப் பேரணி நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ, உளவுத்துறையோ உடனடியாக எத்தனைப் பேர் வருவார்கள், என்ன செய்ய வேண்டும் என்று எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பேரணி நடத்துவதற்கு முன்பாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இந்த அரசு சொல்கிறது. இந்த உத்தரவு பேரணிக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஸ்டெர்லைட் நிர்வாகம், இந்த பேரணியால் எங்கள் ஆலை தாக்கப்படலாம் என்று கோர்ட்டில் அச்சத்தை தெரிவிக்கிறது. அப்போது மாநில சர்க்கார் என்ன சொல்கிறது தெரியுமா? எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று சொல்கிறது. அதற்கு பிறகு வேண்டிய பாதுகாப்புகளை செய்யுங்கள் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அதன் பிறகு 21ஆம் தேதி இரவு அவசர அவசரமாக மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பிக்கிறார்.
22ஆம் தேதி காலையில் மக்கள் அணி அணியாக திரள்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலம் நோக்கி அந்த பேரணி நகர்கிறது. போதிய எண்ணிக்கையில் அங்கு காவலர்கள் இல்லை. காரணம், எத்தனையாயிரம் பேர் திரள்வார்கள் என்பதை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும், உளவுத்துறையும் கவனிக்க தவறியதுதான்.
ஆயிரக்கணக்கான மக்களை தடுப்பதற்கான போதிய காவல்துறை அங்கு இல்லை, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூட யாரும் இல்லை. மாறாக உடனடியாக பலப்பிரயோகத்தில் ஈடுபடுகிறது. மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வருகிறார்கள். ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கு இல்லை.
கோட்டை முற்றுகையிடப்படுகிறது. கோட்டையின் தலைவன், கோட்டையின் காவலன், கோட்டையை காப்பாற்றக்கூடிய மாவட்ட ஆட்சித் தலைவர் கோட்டையின் கதவுகளை திறந்துவிட்டு அங்கிருந்து ஓடிப்போய் கோவில்பட்டியில் ஜமாபந்தி நடத்திக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால் ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது அந்நாட்டு மன்னன் பிடில் வாசித்ததாக சொல்வார்கள். அதை நம்புகிறார்களோ, இல்லையோ அதற்கு நிதர்சமான உண்மை எங்கு நடந்திருக்கிறது என்று சொன்னால் தூத்துக்குடியில். அதனை மாவட்ட ஆட்சியர் செய்து காட்டியிருக்கிறார். இவ்வாறு பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)