
மதுரை செல்லூர் பகுதியில் சிறுவன் ஒருவன் ஜேசிபி வாகனத்தை இயக்கி சாலை அருகில் நின்று கொண்டிருந்த சுமார் 25 க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை செல்லூர் ஐம்பதடி சாலையிலிருந்து கம்மாக்கரை சாலை வரை நள்ளிரவில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையாக சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், பைக்குகள் என 25 வாகனங்கள் சேதமாகி இருந்தது. இன்று காலை வாகனத்தின் உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 25 வாகனங்கள் நள்ளிரவில் யாரால் சேதப்படுத்தப்பட்டிருக்கும் என அதிர்ச்சி கிளம்பியது.
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது 17 வயது சிறுவன் ஒருவன் ஜேசிபி வாகனத்தை இயக்கி சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், லோடு ஆட்டோக்கள் என 25க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியது தெரிந்தது. இந்த ஜேசிபி வாகனத்தை இயக்கிய சிறுவனை பிடித்து பொதுமக்கள் காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். சிறுவன் போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.