More than 20 villagers affected by the sudden action of the Public Works Department

Advertisment

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது கீழ்ச்செருவாய் கிராமம். இந்த ஊரின் அருகாமையில் அமைந்துள்ளது வெலிங்டன் நீர்த்தேக்கம். சுமார் 100 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டுள்ளது இந்த வெலிங்டன் ஏரி என்கிற யமன் ஏரி. கீழ் செருவாய், கொரக்கை இடைச்செருவாய், ஆ. பாளையம், ஐவனூர் , கணக்கம்பாடி, புலிவலம், திட்டக்குடி, ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விளை நிலங்களைக் கையகப்படுத்தி தான் இந்த ஏரி உருவாக்கப்பட்டது. இதன் மூலம், சுமார் 64 கிராமங்கள்24 ஆயிரம் ஏக்கர் பாசன வசதியும் பெறுகிறது. இந்த ஏரியை ஒட்டிய கிராமங்களில் வசிப்பவர்களுக்கு விலை நிலம் உள்ளது.

இந்த நிலத்திற்கும், விவசாயப் பணிகளுக்காகவும் இந்த ஏரிக்கரை மீது சென்று வருவார்கள். இந்தக் கரையை ஒட்டி ஒரு வழித்தடம் உள்ளது. அதன் வழியாகவும் சென்று வருவார்கள். மேலும் அக்கம்பக்கம் ஊர்களுக்கும் இருசக்கர வாகனங்களில் இந்த வழியாகத்தான் சென்று வருவார்கள். இப்படியாக இந்த வழித்தடத்தைப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரி நீர்ப்பிடிப்பு காலங்களில் இந்த கரையில்தான் சென்று பார்வையிடுவார்கள், ஆய்வு செய்வார்கள். இப்படிப் பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருந்தசாலையை, பொதுமக்கள் கடந்த 100 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தனர். அப்படிப்பட்ட சாலை வழியின் முகப்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கேட்டை தற்போது இழுத்து மூடிவிட்டனர்.

இதனால் பொதுமக்கள் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், “எங்கள் விவசாய நிலங்களுக்கு இடுபொருட்கள் எடுத்துச் செல்லவும் விவசாயப் பணிகளுக்காகவும் இந்த வழியாகத்தான் காலம் காலமாகச் சென்று வருகிறோம். தற்போது ஆடிப் பட்டம் நல்ல மழை பெய்து நிலங்களில் விதைப்பு செய்துள்ளோம். இனிமேல் களையெடுக்க, அறுவடை செய்ய உரமிட அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் அக்கம்பக்கம் ஊர்களுக்கும் உறவினர்களை பார்ப்பதற்கும் இந்த வழியாகத்தான் சென்று வருகிறோம். இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிரதான வாயிலில் உள்ள கேட்டை மூடியதால் எங்களது விளைநிலங்களுக்கு செல்ல வழியின்றி வெளியூர்களுக்குச் செல்ல வழி இல்லாமலும் திகைத்து நிற்கிறோம். எனவே பொதுப்பணித்துறை மற்றும் அரசு அதிகாரிகள் தலையிட்டு எங்களுக்கு எப்போதும் நிரந்தரமாகச் சென்று வரும் வகையில் மாற்றுச் சாலையை ஏற்படுத்தித் தரவேண்டும். நீர்தேக்கத்திற்குச் செல்லும் பாதையைப் பயன்படுத்துவதற்கும் அனுமதிக்க வேண்டும்” என்று கூறி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தரப்பில் புகார் அளித்துள்ளனர். பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பிரதான சாலையில் உள்ள கேட்டை திறப்பார்களா? பொதுமக்களுக்கும் சென்றுவர வழி ஏற்படுத்தித் தருவார்களா என சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏக்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கு என்ன தீர்வு காணப் போகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது என்கிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.