More than 10 thousand acres of paddy fields were inundated

Advertisment

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான பரங்கிப்பேட்டை, அண்ணாமலை நகர், குமராட்சி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து விட்டுவிட்டு பெய்துவருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை தீவிரமடைந்துள்ளதால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பியது.

நீர்நிலைகளின் பாதுகாப்பு கருதி வெள்ளநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் அந்தந்த பகுதியில் உள்ள நெல் வயல்கள் மற்றும் சில குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மணிக்கொல்லை, அலமேலுமங்காபுரம், பூவாலை, பூவாலை கிழக்கு, வயலமூர், பால்வாத்துண்ணான், சேந்திரகிள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதில் பெருமாள் ஏரி பாசனம் பெறும் இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கர் நெல் வயல்களில் வெள்ளநீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ள விவசாயி ராமச்சந்திரன் கூறுகையில், “பயிர்கள் கிளை வரும் நேரத்தில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகிவிடும். இவ்வளவு செலவு செய்து காப்பாற்றியதும் வீணாகியது. நெற்பயிரில் நிற்கும் வெள்ள நீரை வடியவைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், மணிகொல்லை கிராமத்திற்கு அருகே சிறுபாலையூர் கிராம வயல்களில் இறால் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ள நீர், அருகேயுள்ள பரவனாற்றில் வடிவதை இறால் குட்டைகள் தடுத்துவிடுகின்றன. விளை நிலங்களுக்கு அருகே இறால் குட்டைகளை நடத்துவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.

Advertisment

மேலும், இறால் குட்டையில் உள்ள கெமிக்கல் கலந்த தண்ணீர் மற்றும் உப்புநீர் நெல் வயலுக்கு வருவதால் நெற்பயிர்கள் பாழாகிவிடுகிறது. மேலும், குண்டியமல்லூர் முதல் பெரியபட்டு வரை பரவனாற்றை தூர்வார வேண்டும். இந்தப் பகுதியில் நிரந்தர தீர்வுக்கு அருவாமூக்கு திட்டத்தை செயல்படுத்த திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கியதாக கூறுகிறார்கள். அதன் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். அதன்மூலம் இந்தப் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்டவிளைநிலங்களை வெள்ள காலங்களில் காப்பாற்ற முடியும்”என்று தெரிவித்தார்.