இராஜபாளையம் தொகுதியில் தனியார் பைனான்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற மகளிர் குழுக்களை வட்டிகளையும், மாதாந்திர தவணைகளையும் உடனடியாக கட்ட வேண்டும் என வலியுறுத்துவதாக இராஜபாளையம் திருவள்ளுவர் தெரு குழு - 1 லிருந்து பொன்களஞ்சியம் என்பவர் எம்.எல்.ஏ. தங்கபாண்டியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இராஜபாளையம் நகரில் உள்ள ஆசீர்வாத் மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட் கிளை நிறுவனத்திற்கு தங்கப்பாண்டியன் நேரில் சென்று மேலாளர் ப்ரித்விராஜிடம், 'வட்டியை செலுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆணையிட்டுள்ளது. அதன்படி கடன் பெற்ற நபர்களுக்கு வட்டியை செலுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரையில் பொதுமக்களை வட்டியை செலுத்த வற்புறுத்தக்கூடாது' எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு மேலாளர், வட்டியை செலுத்த விரும்பும் பொதுமக்கள் மட்டுமே வட்டியை செலுத்தலாம், யாரையும் வற்புறுத்தி வட்டியை வசூல் செய்வதில்லை என உறுதி அளித்தார்.
மேலும் தங்கபாண்டியன் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் ஏழை, எளிய பொதுமக்கள் நலன் கருதி வட்டியையும், மாதந்திர தவணைகளையும்செலுத்த மேலும் கூடுதலாக 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதன் அடிப்படையில் அதற்கான அறிவிப்பு வரலாம், மேலும் 6 மாதத்திற்கு பிறகு உரிய வட்டிகளை தள்ளுபடி செய்யவும் ஸ்டாலின் கோரிக்கை வைப்பார். தள்ளுபடி செய்யவில்லை எனில் ஸ்டாலின் முதல்வரானதும் வட்டிகளை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.
இராஜபாளையம் தொகுதியில் தனியார் நிதி நிறுவனம் தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற மகளிர் குழுக்களையும்பொதுமக்களையும்வியாபாரிகளையும்தொழிலதிபர்களையும்மாதந்திர தவணைகளையும், வட்டியையும் கட்ட வற்புறுத்துவதை தடுக்கக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்கப்பாண்டியன் மனு அளித்தார்.
அப்போது, மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற பொதுமக்கள் வட்டியை செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ள நிலையில் பொதுமக்களையும், மகளிர் குழுக்களையும் மாதாந்திர தவணையும், வட்டியையும் கட்ட சொல்லி கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மனவேதனை அடையும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே தாங்கள் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புவதோடு, அவர்களை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் மேல்நிலை கல்விக்கு மட்டும் கல்வி கடன் வழங்குவதுபோல் LKG முதல் 5 ம் வகுப்பு வரை படிக்க வைக்க பெற்றோர்களுக்கு மகளிர் குழுக்கள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அல்லது கல்வி கட்டணத்தை அரசே ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு மாவட்ட ஆட்சியர் வட்டியை செலுத்த வற்புறுத்தும் நிதி நிறுவனங்கள் மீது காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களுடன் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கல்வி கட்டணம் குறித்து தலைமை செயலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் மாவட்ட கண்காணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனு குறித்து கூறியபோது, தான்வெளியில் உள்ளதால் உதவியாளரிடம் மனுவை கொடுக்கக்கூறியவர், மனு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்துள்ளார் என தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.