Skip to main content

“ரமலான் மாதம் தொடங்க இருப்பதால், ஊரடங்கில் சில தளர்வுகள் தேவை” - எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கோரிக்கை

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

As the month of Ramadan begins, the curfew needs some relaxationv

 

சமீபகாலமாக அதிகரித்துவரும் கரோனா 2வது அலை பரவல் தொடர்பாக, தமிழக அரசு பகுதிநேர ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் சில தளர்வுகள் வேண்டி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச. உமர் பாரூக் தமிழக தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சனுக்கு கோரிக்கை மனு அளித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், ராஜா முகமது ஆகியோர் உடன் இருந்தனர். 

 

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, “கோவிட் 2வது அலை பரவல் தொடர்பாக ஏப்ரல் 10 முதல் அமல்படுத்தப்பட உள்ள சில வழிமுறைகளுடன் கூடிய பகுதிநேர ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மத வழிபாடு தொடர்பான நிகழ்வுகளுக்கு இரவு 8 மணி முதல் அதிகாலை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்.14 முதல் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்குகிறது.

 

As the month of Ramadan begins, the curfew needs some relaxation

 

இம்மாதத்தில் அதிகமான அளவு இரவு நேர வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள். கடந்த ஆண்டு கோவிட் பரவல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இஸ்லாமியர்கள் ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

 

ஆகவே, இதனைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்சம் இரவு 8 மணி முதலான ஊரடங்கு அறிவிப்பை இரவு 10 மணிக்கு மாற்றினால், அது இஸ்லாமியர்களின் ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும், இரவுநேர ஊரடங்கை இரவு 8 மணியிலிருந்து இரவு 10 மணிக்கு மாற்றி அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
District Collectors Chief Minister M.K. Stalin's main order

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாகப் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 ஆயிரத்து 40 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரம்ஜான் உணவுத் திருவிழாவுக்கு திடீர் போர்க்கொடி!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
A sudden war flag for the Ramadan food festival at bangalore

வருகிற மார்ச் 12ஆம் தேதி இஸ்லாமியர்கள் பண்டிகையான ரம்ஜான் நோன்பு காலம் தொடங்குவதால், ஒவ்வொரு பகுதியிலும் ‘உணவுத் திருவிழா’வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூர், பிரேசர் டவுனில் உள்ள எம்.எம்.ரோடு, மசூதி ரோடு மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ‘ரம்ஜான் உணவுத் திருவிழா’ என்பது வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த திருவிழாவின் போது, ரம்ஜான் காலத்தில் இஸ்லாமியர்கள்  அருந்தும் வெவ்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் விற்பனை செய்யப்படும். இந்த திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், இந்த உணவுத் திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரேசர் டவுன் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக, இந்த சங்கத்தின் சார்பில் 3,500 பேர் கையெழுத்திட்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ ஏ.சி.சீனிவாடாவிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். 

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, ‘ரம்ஜான் உணவுத் திருவிழாவில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் இங்கு வருகிறார்கள். இதன் காரணமாக பிரேசர் டவுன் பகுதியில் 40 நாட்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த ஆண்டே, இந்த உணவுத் திருவிழாவை நிறுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தை தொடங்கினோம். ஆனால், அதனையும் மீறி உணவுத் திருவிழா நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு, இந்த திருவிழாவின் போது ஒரு கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்க, ஆம்புலன்ஸ் வர முடியாத நிலைக்கு கூட்ட நெரிசல் இருந்தது. மேலும், இந்த திருவிழாவினால், குப்பை, புகை, கழிவுநீர் போன்ற சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன. இங்கு விற்பனை செய்யும் இறைச்சி உணவு வகைகள் தூய்மையற்ற முறையில் சமைக்கப்படுவதால், இதனை உண்ணும் மக்கள் உடல்நலக்குறைவுக்கு ஆளாகின்றனர். எனவே, ரம்ஜான் உணவுத் திருவிழாவை பிரேசர் டவுன் பகுதியில் நடத்தக்கூடாது’ என்று தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய பண்டிகையான ‘ரம்ஜான் உணவுத் திருவிழாவுக்கு’ அங்கு உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.