தமிழகத்தில் ஆக்கிரமிப்பு, தைலமரக்காடு வளர்ப்பு, வறட்சி ஆகிய காரணங்களால் வனப்பரப்புகள் குறைந்து வருவதால் காடுகளில் வாழந்த பறவைகள், விலங்கு இனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எஞ்சியுள்ள பறவைகள், வன விலங்குகள் தண்ணீர் உணவு தேவைக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. இதனால் சாலைகளை கடக்கும் போது விபத்துகளில் சிக்கி பலியாகும் துயரச் சம்பவங்களும் ஏராளம்.
மற்றொரு பக்கம் மயில்கள் ஊர்களுக்கு நுழைந்து சிறுதானிய பயிர்களை தின்றுவிடுகிறது. இதனால் பல இடங்களில் விஷம் வைத்தும், கன்னி வைத்தும் தேசியப் பறவையான மயில்கள் வேட்டையாடப்படுகிறது. அதே போல குரங்குகள் தற்போது அனைத்து கடைவீதி, கிராமங்களுக்குள்ளும் ஊடுருவி உணவுப் பொருட்களை எடுப்பதுடன் யார் கையில் இருந்தாலும் பறித்துச் சென்றுவிடுவதுடன் வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களை அள்ளி வீசி அட்டகாசம் செய்கிறது. யாராவது தடுக்க முயலும் போது கடித்துவிடுவதும் நடக்கிறது.
இதே போல தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்திற்குள் 20 நாட்களுக்கு முன்பு நுழைந்த ஒரு குரங்கு கடைவீதியில் யார் கையில் எது இருந்தாலும் பிடுங்கியது. தடுக்க முயலும் போது சுமார் 20க்கும் மேற்பட்டோரை கடித்தும் உள்ளது. பலரது தலையில் ஏறிக்கொண்டு அட்டகாசம் செய்தது. இதனால் கடைவீதிக்கு வரவே அச்சப்பட்ட மக்கள் குழந்தைகளை கடைகளுக்கு அனுப்புவதை நிறுத்திக் கொண்டனர்.
இத்தனை அட்டகாசம் செய்யும் குரங்கிடம் இருந்து கிராம மக்களை காக்க வேண்டும் என்ற இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறை அதிகாரிகள் பெரிய இரும்பு கூண்டு அமைத்து 20 நாட்களாக 20க்கும் மேற்பட்டோரை கடித்து அச்சுறுத்திய குரங்கை பிடித்துச் சென்றனர். இதன் பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் நெடுவாசல் மக்கள்.
இது போன்ற சம்பவங்களை தடுக்க வழக்கமான காடுகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு பழையபடி வனங்களை உருவாக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.