தமிழ்நாட்டில் இயற்கையாய் அமைந்த பலவகை மரங்கள், அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டுப் பாதிப்புகளை ஏற்படுத்தும் தைலமரக்காடுகளின் வனப்பரப்புகள் அதிகரித்து வருகின்றன. மற்றொரு பக்கம் வனங்கள் அழிக்கப்பட்டு காங்கிரீட் கட்டட ஆக்கிரமிப்புகளால் வனப்பரப்புகள் குறைந்து வருவதால் வனவிலங்குகளும் குறைந்து வருவதுடன் உணவுக்காகக் கிராமங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருவது வேதனை அளிக்கிறது. வாழ்விடம் இல்லாத வனவிலங்குகளால் ஏற்படும் தொல்லைகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர் பொது மக்கள். இப்படியான சில மோசமான சம்பவங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள தீத்தான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது ஆறு மாத கைக்குழந்தை அனன்யா. இந்நிலையில் இன்று (20.07.2025 - ஞாயிற்றுக்கிழமை) காலை குழந்தையின் தாய் வீட்டிற்குள் குழந்தையைத் தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தையின் கதறல் சத்தம் கேட்டு தாயும் வீட்டில் இருந்தவர்களும் ஓடிவந்து பார்த்த போது தொட்டிலில் கிடந்த குழந்தையை ஒரு குரங்கு கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விரட்டியுள்ளனர்.அதே சமயம் அங்கிருந்து போக மறுத்த குரங்கு பெரியவர்களையும் மிரட்டியுள்ளது. ஒரு வழியாகத் தொட்டிலில் கதறிய குழந்தையை மீட்ட போது குழந்தை அனன்யாவின முன் தலையில் பெரிய காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
இதனையடுத்து மீட்கப்பட்ட குழந்தையைப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவா என்பவரின் 3 மாத ஆண் குழந்தை அதியனைத் தொட்டிலில் தூங்க வைத்திருந்த போது குரங்குகள் வந்து குழந்தையின் தலையில் கடித்துக் குதறியதால் பலத்த காயம் ஏற்பட்டு அவர்களும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து பச்சிளங்குழந்தைகளைக் குரங்குகள் கடித்துக் குதறுவதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தற்காலிகமாகக் குரங்குகளை விரட்டியுள்ளனர். மேலும் இந்த கிராமத்திலிருந்து நிரந்தரமாகக் குரங்குகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள்.