Skip to main content

லிஃப்ட் கேட்டவர்கள் பணத்தை எடுத்தனரா? காவல்நிலையத்தில் புகார் அளித்த டிரைவர்

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

Money Robbed from lorry  driver complained to the police
                                                    மாதிரி படம்  

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தட்டாங்குட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், மினி லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று முன் தினம் நாமக்கல்லில் இருந்து தனது மினி லாரியில் கோழி முட்டை லோடு ஏற்றிக்கொண்டு சென்னை சென்றுள்ளார். சென்னையில் முட்டைகளை இறக்கிவிட்டு அதற்குரிய பணம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வசூலித்துக் கொண்டு மீண்டும் நாமக்கல் நோக்கி தனது மினி லாரியில் திரும்பி வந்து கொண்டிருந்தார். 

 

நேற்று அதிகாலை விழுப்புரம் அருகே உள்ள பேரங்கியூர் என்ற இடத்தில் லாரி வந்த கொண்டிருந்தபோது, இரண்டு திருநங்கைகள் சாலையோரம் நின்று லாரியை கைகாட்டி லிஃப்ட் கேட்டுள்ளனர். லாரியை நிறுத்திய டிரைவர் லட்சுமணனனிடம், திருநங்கைகள் தங்களை அரசூர் கூட்ரோட்டில் இறக்கி விடுமாறு கூறியுள்ளனர். அதன்படி லாரி டிரைவர் லட்சுமணனுடன் திருநங்கைகள் லாரியில் பயணம் செய்தனர். அரசூர் பேருந்து நிறுத்தம் வந்ததும், திருநங்கைகள் இறங்கிக்கொண்டனர். 

 

அவர்கள் இறங்கிய பிறகு டிரைவர் லட்சுமணன் தான் வைத்திருந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் 50 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமணன், பணம் வைத்திருந்த லாரி கேபினில் தேடிப்பார்த்தார். அங்கேயும் பணம் இல்லை. எனவே லாரியில் லிஃப்ட் கேட்டு வந்த திருநங்கைகள் தான் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றிருக்க வேண்டும் என, லாரி டிரைவர் லட்சுமணன் உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்குச் சென்று சம்பவம் குறித்துத் தெரிவித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரியில் லிஃப்ட் கேட்டு வந்து அரசூரில் இறங்கிய இரண்டு திருநங்கைகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்