Skip to main content

அம்மா மினி கிளினிக் வேறு பகுதிக்கு மாற்றம்... எம்.எல்.ஏ வீட்டை முற்றுகையிட்ட மக்கள்!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பட்டூர் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை வேறு பகுதிக்கு மாற்றியதால், அப்பகுதி மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி் வீட்டை முற்றுகையிட்டனர். 

 

திருப்பட்டூர் ஊராட்சியில் புகழ்பெற்ற அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. தலையெழுத்தை மாற்றும் ஸ்தலமாகவும், பிரம்மாவுக்கென்று தனி சன்னதியாகவும் உள்ளதால் திருச்சி மட்டுமில்லாது வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் எதுவுமில்லை. முதலுதவி சிகிச்சைக்கு செல்ல வேண்டுமென்றால் 10 கி.மீ.தூரம் செல்ல வேண்டும். உள்ளூர் மக்களின் வசதிக்காகவும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காகவும் தற்போது தமிழக அரசால் தொடங்கிவைக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை திருப்பட்டூருக்கு ஒதுக்கீடு செய்திருந்தனர். இதனால் மினி கிளினிக் அமைவதற்கான அனைத்து வேலைகளையும் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் செய்துள்ளார். 

 

தற்போது  கிளினிக்கை அருகில் உள்ள ஊராட்சிக்கு மாற்றியதால் ஆத்திரமடைந்த மக்கள், திருப்பட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் தலைமையில் 50 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி வீட்டை முற்றுகையிட்டனர். சம்மந்தப்பட்ட ஊராட்சி மக்களிடம் வரும் 24 -ஆம் தேதிக்குள் திருப்பட்டூர் ஊராட்சிக்கு மினி கிளினிக் அமைக்கப்படுமென எம்.எல்.ஏ உறுதி கூறியதால் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டுக் கலைந்துசென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்