
கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவரது மகள் நித்யா (30). கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.நித்யாவுக்கும் பிரகாசுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
ஒன்றரை வயதில் விஜய் தண்டபாணி என்ற மகன் உள்ள நிலையில் மீண்டும் நித்யா கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியில் உள்ள தாய் வீட்டிற்குப் பிரசவத்திற்காக வந்துள்ளார் நித்யா. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு மீண்டும் இரண்டாவதாக நித்யாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
அந்தப் பெண் குழந்தைக்கு சஷ்டிகா என்று பெயரிட்ட நிலையில், தனது இரண்டு குழந்தையுடன் நித்யா தாய் வீட்டில் இருந்துள்ளார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு, பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்த்துவிட்டுச் சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று (12/01/2021) மாலை நித்யா தனது அறைக்குச் சென்று பிள்ளைகளுடன் இருந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த தாய் புவனேஸ்வரி கதவை தட்டியபோது நித்யா திறக்கவில்லை. அதையடுத்து கதவைத்தட்டியும், கூப்பிட்டும் திறக்காததால் தாய் கூச்சலிட்டார்.
அவரது கூச்சல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து பார்த்தபோது, நித்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.
மேலும் அவரது இரண்டு குழந்தைகளும், மயங்கிய நிலையில் கிடந்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தைகளை உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் குழந்தைகளைக் கொலை செய்து நித்யா தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நித்யாவின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நித்யா தற்கொலை செய்து கொண்டாரா?, குழந்தைகளை ஏன் கொலை செய்தார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)