
சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள தமிழாய்வு நிறுவனத்தின் புதிய வளாகம் மற்றும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை கடந்த ஜனவரி 12- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் திறந்துவைத்தார்.
தமிழ்நாட்டில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகை, திண்டுக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூபாய் 4,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிலையில் இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12- ஆம் தேதி மாலை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், ''தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் தமிழகத்திற்கு பொங்கல் பரிசு கொடுத்திருக்கிறார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடந்து வருகிறது. தமிழ் இலக்கியம், தமிழகம் மீது பிரதமர் மோடி அதிக பற்று வைத்து உள்ளார் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் மருத்துவக் கல்லூரி திறப்பு விவகாரத்தில் சாதனை படைத்த அதிமுகவை குறை கூறுவது கண்டிக்கத்தக்கது என தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார், '2011 ஆம் ஆண்டு ஆட்சியை விட்டு விலகும் தருவாயில் மக்களை ஏமாற்ற அரசாணை வெளியிட்டு சாதனை எனக் கூறுவதா? என திமுகவிற்கு கேள்வி எழுப்பியுள்ள, அவர் மருத்துவத்துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என்றால் அதற்கு அதிமுகதான் காரணம்' எனவும் தெரிவித்துள்ளார்.