Skip to main content

பிரதமர் மோடி அரசின் கனவு திட்டம் படுதோல்வி 

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
Village

 

2014 ஆம் ஆண்டு பிஜேபி அரசு மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. பிரதமராக மோடி பதவியேற்றார்.

 

சில மாதங்களில் "சன்ஸ் சாத் ஆதர்ஸ்கிராம யோஜனா " என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு எம்பியும் அவர்கள் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஏதாவது ஒரு பின்தங்கிய கிராமத்தை தத்தெடுத்து, மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் இந்த கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும் என்று அறிவித்தார். இதற்காக ஒவ்வொரு எம்பியும் அவரவர் தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தை தேடி கண்டுபிடித்து தத்தெடுத்து அந்த கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யப்போவதாக அறிவித்தனர். பல தொகுதிகளில் இதற்காக துவக்க விழாக்கள் நடத்தப்பட்டன. திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா என்று எம்பிக்கள் அமர்க்கள படுத்தினார். 

 

ஆனால் அதன் பிறகு தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் பெரிய அளவில் எந்த திட்டப்பணிகளும் நடைபெறவில்லை. கடந்த ஆட்சி முடிந்து இரண்டாவது முறை மோடி பிரதமராகி ஒரு ஆண்டு கடந்து விட்டது. இந்தத் திட்டம் பற்றி பல முன்னாள் எம்பிக்களிடம் நாம் கேட்டபோது, மத்திய அரசு கிராமத்தை தத்தெடுக்க கூறியதோடு சரி, அதன் பிறகு திட்டத்தை செயல்படுத்துவதற்கு என சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எம்பிக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் மூலம் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் திட்டப்பணிகளை நிறைவேற்றுமாறு கூறியது மத்திய அரசு. அது சாத்தியமற்றது.

 

காரணம் ஒரு எம்பி தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களன் தேவைகளை இந்த நிதியின் மூலம் நிறைவேற்றி வருகிறோம். அப்படிப்பட்ட நிலையில் ஒரு கிராமத்தை மட்டும் தத்தெடுத்து ஆண்டுக்கு ஒரு முறை ஒதுக்கப்படும் நிதியில் திட்ட பணிகளை செய்தால் மற்ற கிராமங்களில் எந்த பணியையும் செய்ய முடியாமல் போய்விடும் நிலை ஏற்பட்டது. எனவே மத்திய அரசு தத்தெடுக்கக் கூறிய கிராமங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்காததால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்று கூறுகின்றனர்.

 

இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் கபூர் தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய பொதுக்குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்த குழுவினர் இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றி நேரடியாக சென்று ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் இந்த திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்காததால் இந்த திட்டம் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் எதிர்பார்த்த வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஒரு சில கிராமங்களில் மட்டும் எம்பிக்களின் தனிப்பட்ட முயற்சியால் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி இந்த திட்டம் கிராமப்புறங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிராமங்களை தத்து எடுக்குமாறு மத்திய அரசு கூறிவிட்டு அதற்கு நிதி ஒதுக்காமல் திட்டப்பணிகள் எந்த நிலையில் உள்ளது என்று ஆய்வு செய்யுமாறு ஒரு குழுவை அனுப்பி அறிக்கை கேட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது என்கிறார்கள் முன்னாள் எம்பிக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

 ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று தொடக்கம்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
New program be aunched today at Chief minister mk stalin instruction

மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் 'உங்களைத் தேடி - உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கப்பட உள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் அறிவித்தார். 

'உங்களைத் தேடி - உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது. 

அதன்படி, முதலமைச்சர் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’திட்டம் இன்று (31-01-24) அமலுக்கு வர உள்ளது. இன்று தொடங்கும் இந்த திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து நேரடியாக அங்கு சென்று 24 மணி நேரம் தங்கி மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண்பர். 

மேலும், இந்த திட்டத்தின்படி, ஆட்சியர்கள் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை அந்த கிராமத்தில் தங்கி இருந்து பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில் ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண உள்ளனர்.  மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.