THIRUMAVALAVAN

பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுமேயானால் அவரது தமிழகப் பயணம் தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் இலவச ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைப்பதற்காக பிரதமர் வரவுள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகம் வருவதற்கு முன்னர் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதற்கு இணங்க காவிரி மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்காற்றுக் குழுவையும் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

Advertisment

ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. உச்சீதிமன்றத்தின் கெடு மார்ச் 30ஆம் தேதியோடு நிறைவடைகிறது. தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியத்தை அமைப்போம் என்று இதுவரை மத்திய அரசின் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. காவிரி பிரச்சனையில் ஒவ்வொரு முறையும் மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்து காலம்தாழ்த்தியே வந்துள்ளது. நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஆறாண்டுகாலம் இழுத்தடிப்பு செய்தது. மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையில் இருந்த போதே மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மூன்றே நாட்களில் அமைப்போம் என உச்சநீதிமன்றத்திடம் ஒப்புதல் அளித்துவிட்டு சென்ற மத்திய அரசு அடுத்த நாளே தனது நிலைப்பாட்டைத் தலைகீழாக மாற்றிக் கொண்டது. அதைப் போலவே இப்போதும் மத்திய அரசு காலம் தாழ்த்துமோ என்ற அய்யம் நமக்கு எழுந்துள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள இலவசத் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்க வருவது தமிழ்நாட்டின் மீது அவருக்கு இருக்கும் அரசியல் ஆர்வத்தைப் புலப்படுத்துகிறது. பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுமேயானால் அவரது தமிழகப் பயணம் தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். அத்துடன், கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்வதையும் தடுப்பதற்கு ஏதுவாக இருக்குமென்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisment