nn

சிதம்பரம் வடக்கு வீதி கஞ்சி தொட்டி முனையில் முன்னாள் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.கலியபெருமாள் 4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பி.பி.கே.சித்தார்த்தன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பி.பி.கலியபெருமாள் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ''இன்றைக்கு நாடாளுமன்றம் நடைபெறாமல் இருப்பதற்கு மோடி தான் காரணம். ஏனென்றால் அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. சர்வாதிகாரிகள் இரண்டு வகை. இராணுவ ரீதியாக ஒரு சர்வாதிகாரம் உண்டு. அதன் மூலம் ஆட்சியை கைப்பற்றுவார்கள். தேர்தல் மூலம் வந்து சர்வாதிகாரிகளாக மாறி ஆட்சியை கைப்பற்றுவார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு பொதுவான வரவு செலவுத் திட்டமும், வேளாண்மைக்கு என தனி வரவு செலவுத் திட்டமும் மிகச் சிறப்பாக நிறைவேற்றி உள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் ஆடம்பரம் இல்லாமல் வெற்று அறிவிப்புகள் இல்லாமல் வளர்ச்சியை நோக்கி இந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கட்டுப்படுத்தி உள்ளார்.இந்தியாவில் செய்ய முடியாத விஷயங்களில் ஒன்று நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்துவது தான்.அவரை பாராட்ட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

Advertisment

தமிழக முதல்வர் வேளாண்மையில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார். அதனை வளர்க்க வேண்டும் என விரும்புகிறார் என்பதை எடுத்துக்காட்டாக இந்த பட்ஜெட் சிறந்த முறையில் உள்ளது. உதாரணமாக கொள்முதல் விலையை ஓரளவு அதிகப்படுத்தி உள்ளது வரவேற்கத்தக்க விஷயம்.நெல் சன்ன ரகத்திற்கும் மோட்டார் ரகத்திற்கும் கணிசமான முறையில் உயர்வு தந்துள்ளார்கள். அதனை நாங்கள் வரவேற்கிறோம். புதிய விவசாய மின் இணைப்புகளை அறிவித்துள்ளார்கள். நீண்ட காலமாக புதிய மின் இணைப்பு கிடைப்பதில்லை. ஆனால் தற்போது விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு கொடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனையும் தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றனர். நாடாளுமன்ற வரலாற்றிலேயே காந்தி சிலை முன்பு தான் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆனால் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள முதல் மாடியில் ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர். ஏனென்றால் தங்களின் எதிர்ப்பை உரக்கச் சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்'' என்றார்.

Advertisment