narendra-modi

Advertisment

பயங்கரவாதத் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி உதவித்தொகை வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மோடி அரசின் காஷ்மீர் கொள்கை படுதோல்வி அடைந்துவிட்டது. அரசப் பயங்கரவாதத்தை ஏவி அமைதியை ஏற்படுத்தி விடலாம் என்ற பாஜக அரசின் போக்கு வெற்றி பெறவில்லை என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புப் படையினர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தைச் சார்ந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

Advertisment

ஜம்முவிலிருந்து காஷ்மீருக்குச் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் படைவீரர்களின் வாகனத்தின் மீது பாகிஸ்தான் பின்னணியுடன் இயங்குவதாகச் சொல்லப்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதால் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய இயக்கங்களின் பயங்கரவாத போக்குகளை மக்கள்துணையுடன் ஒடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

மத்தியில் பாஜக அரசு அமைந்ததற்குப் பிறகு நடத்தப்பட்டுள்ள பதினெட்டாவது பயங்கரவாதத் தாக்குதல் இதுவென்று சொல்லப்படுகிறது. மிக அதிகமான எண்ணிக்கையில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது புலனாய்வு அமைப்பின் தோல்வியையே காட்டுகிறது. இந்தத் தாக்குதலில் பெருமளவு ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. மோடி அரசால் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள காஷ்மீரில் அந்த அளவுக்கு வெடிமருந்து கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்றால் அது புலனாய்வுத் துறையின் தோல்வியையே காட்டுகிறது.

thirumavalavan

Advertisment

மோடி அரசின் காஷ்மீர் கொள்கை படுதோல்வி அடைந்துவிட்டது. அரசப் பயங்கரவாதத்தை ஏவி அமைதியை ஏற்படுத்தி விடலாம் என்ற பாஜக அரசின் போக்கு வெற்றி பெறவில்லை. இப்போது நடைபெற்றுள்ள தாக்குதல் அதைத்தான் காட்டுகிறது. காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க இப்போது கடைபிடிக்கப்படும் அணுகுமுறை தவறானது என்பதை மோடி அரசு ஒப்புக்கொண்டு, காஷ்மீர் மக்களின் ஒத்துழைப்புடன் இனியாவது சனநாயக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இந்தியாவிலுள்ள அனைத்துக் கட்சிகளும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் பிரச்சனையில் மத்திய அரசோடு ஒன்றுபட்டு தான் நிற்கின்றன. இதில் அரசியல் லாபம் தேட முயற்சிக்காமல் கண்ணியமான முறையில் நல்லதொரு தீர்வை மத்திய அரசு முன்வைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.