ADVERTISEMENT

‘மாக் ட்ரில்’ சோதனை; அமைச்சர் நேரில் ஆய்வு

11:11 AM Apr 10, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று கடந்த ஒரு ஆண்டாகக் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்து உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டன. இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கையின்மை உள்ளிட்ட சவால்களை அரசுகள் எதிர்கொண்டு வந்தன.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகையை (மாக் ட்ரில்) மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்வு மேற்கொள்ளப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அமைச்சர் மா.சுப்ரமணியன் ஒத்திகை நிகழ்வை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாவட்ட அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் மாதிரி பயிற்சி துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த மாதிரி பயிற்சியில் ஈடுபடுவார்கள். மாக் ட்ரில் எனப்படும் இந்த மாதிரி பயிற்சி தமிழ்நாட்டின் அனைத்து மருத்துவமனைகளிலும் நடைபெறும்.

தொடர்ச்சியாக முதல் அலை இரண்டாம் அலை மூன்றாம் அலை என இந்தியா மட்டும் அல்ல. ஒட்டு மொத்த உலகமும் சந்தித்து வருகிறது. இந்த மாதிரி பயிற்சியில் மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கைகள், வெண்டிலேட்டர் வசதிகள், பயிற்சி பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை, மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை, கோவிட் 19க்கான பரிசோதனைகள், அதற்கான வசதிகள் என்னென்ன இருக்கிறது, மாத்திரை மருந்துகளின் கையிருப்பு, முகக் கவசங்களின் எண்ணிக்கை, தனி நபர் பாதுகாப்பு கவச உடைகளின் எண்ணிக்கை போன்ற பல்வேறு பரிசோதனைகள் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் 64 ஆயிரத்து 284 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது. அதில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை 33 ஆயிரத்து 664 மற்றும் ஆக்ஸிஜன் வசதியல்லாத படுக்கைகள் 22 ஆயிரத்து 820 ஆக உள்ளது. 7797 தீவிர சிகிச்சை படுக்கைகள் தயாராகவும் உள்ளது” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT