ADVERTISEMENT

சிந்தை கலங்கியவரை சித்தராக்கிய கும்பல்!

12:05 PM Dec 03, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூரில் சித்தர் என்று அழைக்கப்பட்ட மனநலம் பாதித்த முதியவரை மாவட்ட நிர்வாகம், காவல்துறை பாதுகாப்புடன் மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக மனநலம் பாதித்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் ஒருவர் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். இதனையறிந்த சில சமூக ஆர்வலர்கள் உண்ண உணவு கொடுத்ததால் அப்பகுதியில் உள்ள செண்டர் மீடியன் பகுதியில் அரளி செடியின் மத்தியில் முதியவர் வசிக்க தொடங்கினார்.

இந்நிலையில், கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர், சிலர் நாகம்பள்ளி பிரிவு சாலை ஓரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்க குடிசை அமைத்து இருப்பிடம் செய்து கொடுத்தனர். மேலும், இதனை பயன்படுத்தி, உடல் முழுவதும் விபூதியைப் பூசி, அவரை சித்தர் என்று கூறி அந்தக் கும்பல் உண்டியல் வைத்து பணவசூல் செய்து மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள், ஊர்மக்கள் இணைந்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும், அவரது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், அவரை மீட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் கவிதா, வட்டாட்சியர் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் சந்தோஷ் குமார் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்து உடல்நலம் பாதித்த நிலையில் இருந்த தகரக்கொட்டாய் சித்தர், மலைக்கோவிலூர் சித்தர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT