
இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதா சாகேப் பால்கே விருது' வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே விருது' நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்" என்று குறிப்பிட்டுள்ளார்.