/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shanmuga_0.jpg)
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் செயலர் சண்முகநாதன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ள இரங்கல் அறிக்கையில்,"முத்தமிழறிஞர் கலைஞரின் நிழல் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சண்முகநாதன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தியை கேட்டு மிகவும் துயருற்றேன். 1969ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கலைஞர் அவர்களின் மறைவு வரை சுமார் 48 ஆண்டுகள் அவருடனேயே அவரது நிழலாக வலம் வந்தவர். கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர்.
கலைஞருடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூலில் பதிவு செய்த சண்முகநாதன், “என்னுடைய இந்தப் பிறவி தலைவருக்கானது தான். அவர் இல்லாமல் நான் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். சண்முகநாதன் குறித்து கலைஞரோ “சண்முகநாதன் என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் என்பதைவிட, எனது அகத்திலே இருந்து பணியாற்றுபவர்” என்று நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். அவரது இனிய பண்பாடுகளை நேரில் பலமுறை அனுபவித்த நினைவுகள் அலைமோதுகின்றன.
ஒரு நேர்முக செயலர் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதற்கு நல்ல முன்னுதாரணமாக திகழ்ந்த மாண்பாளர் மறைந்துவிட்டார். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)