mlas and mps cases special courts chennai high court order

Advertisment

தமிழகம் முழுவதும்முன்னாள், இந்நாள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டுமென்றும், விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட இடைவெளியில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும், சிறப்பு நீதிமன்றங்களுக்குசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கக் கோரியும், அரசியல் கட்சிகள் தொடங்கவும், கட்சிகளில் நிர்வாகிகள் பொறுப்பு வகிக்கத் தடை கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், அவற்றைக் கண்காணிப்பது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என, அனைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான 56 அவதூறு வழக்குகள் தொடர்பான மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து, ஒரு நாளைக்கு 10 வழக்குகள் வீதம், சம்பந்தப்பட்ட நீதிபதிகள் முன் விசாரணைக்குப் பட்டியலிட்டு, அவற்றின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, நீதித்துறைப் பதிவாளருக்கு உத்தரவிட்டது.

Advertisment

அதே போல, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரணைக்கு எடுத்து, அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என, கீழமை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,கடந்த உத்தரவின் அடிப்படையில், 07.12.2020 முதல் 23.12.2020 வரையிலான காலக்கட்டத்தில், நீதிபதி சதீஷ்குமார் முன்பு தினம்தோறும் 10 அவதூறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு, முகாந்திரமற்ற வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதன் விவரங்களைத் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றங்களையே சிறப்பு நீதிமன்றங்களாகச் செயல்பட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளபோதும், ஏற்கனவே சம்பந்தப்பட்ட செஷன்ஸ் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதில் முன்னேற்றம் இல்லை எனவும், தமிழகம் முழுக்க முன்னாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 370- க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisment

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதைப் பொறுத்து, விரைவில் முடிவெடுக்கப்படும். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவை வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க, ஒரு முழுமையான செயல் திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது. அவர்கள் மீதான குற்ற வழக்குகளின் விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து,குறிப்பிட்ட இடைவெளியில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் எனத் தெரிவித்து,வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.