
துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள சுமார் 52 ஊராட்சி ஒன்றியங்களில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த யூனியன் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 63 பெண் பயனாளிகள் துறையூர் யூனியன் அலுவலகத்திற்கு மதியம் சுமார் 12 மணி முதல் வரத்தொடங்கினர். ஆனால் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) புவனேஸ்வரி இரவு 8.30 மணிக்கு வந்த பிறகே நிகழ்ச்சி துவங்கியது.
இரவு நேரத்தில் கைக்குழந்தைகளுடன் ஒரு சில பயனாளிகளைக் கண்ட எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் சுமார் 8 மணி நேரம் வரை காக்க வைத்த அதிகாரிகளை கடிந்து கொண்டார். சுமார் 83 பயனாளிகளில் 67 பயனாளிகளுக்கு மட்டும் தங்கம் வழங்கப்பட்டது. பட்டியலில் பெயர் இருந்தும் மீதமுள்ள சிலருக்கு தங்கம் மறுநாள் பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் கூறியதால் 8 மணிநேர காத்திருப்புக்கு பின் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் உப்பிலியபுரம் யூனியனில் 132 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

இரவு நேரத்தில் காலதாமதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பயனாளிகள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு ஒரு சிலருக்கு பேருந்து இல்லாததால் கடும் குளிர் நேரத்தில் பெரும் அவதிக்குள்ளாயினர். மேலும் 2 யூனியனிலும் கரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் தங்கத்தை பெற வந்த பயனாளிகளை ஒரே அறையில் சிறிதும் சமூக இடைவெளியில்லாமல், பெரும்பாலானோர் முகக்கவசம் இன்றிஅமர்ந்திருந்தது அனைவருக்கும் ஒரு வித அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.