
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்த, சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கும் 45 திருநங்கைகளுக்கு அதிமுகவை சேர்ந்த தொழிலதிபர் மகேஷ்பாபு என்பவர் ஏற்பாட்டின் பேரில் அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான அதிமுகவின் சேவூர்.ராமச்சந்திரன் ஜூன் 6 ஆம் தேதி வழங்கினார்.
அமைச்சரால் கொடுக்கப்பட்ட நிவாரண அரிசி பைகளில் "தஞ்சாவூர் பொன்னி அரிசி" என எழுதியிருந்தது. ஆனால், அதனைப் பிரித்து பார்த்தபோது, உள்ளே அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதனைப்பார்த்து அதிர்ச்சியான திருநங்கைகள், நிகழ்ச்சி நடந்த இடத்திலேயே முன்னாள் அமைச்சரிடம், "இது ரேஷன் அரிசி என்று சொல்லியே தந்திருக்கலாம், எதற்காகப் பொன்னி அரிசி என்று எழுதிக் கொடுத்து எங்களை ஏமாற்ற வேண்டும்" எனக்கேட்டு தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.
இதுபற்றி எனக்கு தெரியாது எனக்கூறிய எம்.எல்.ஏ, உடனடியாக மாற்று அரிசி தருவதாகக் கூறினார். ஆனால், திருநங்கைகள், "வேண்டாம் தஞ்சாவூர் பொன்னி அரிசி என எழுதி, ரேஷன் அரிசி தந்ததுதான் மனவருத்தமே தவிர, மற்றபடி இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்களின் நிலையை உணர்ந்து நிவாரண உதவிகளை வழங்கியதற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறினர். அதன்பின்னர், அவர்களுக்கு ஆளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் என 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து, அவர்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதேபோல, வேறு சில இடங்களிலும் நிவாரணப்பொருள் என அவர் ரேஷன் அரிசி தந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. பொன்னி அரிசிக்கு பதில் ரேஷன் அரிசி தந்தது ஒருபக்கம் என்றால், இலவசமாக ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்கிற கேள்வி மறுபக்கம்.
ஒருவருக்கு தலா 10 கிலோ என்றால் 20 பேருக்கு 200 கிலோ அரிசியாகிறது. இவ்வளவு அரிசி எப்படி, எங்கிருந்து கிடைத்தது. இலவச அரிசி விற்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்ற நிலையில், அரிசி எப்படிக் கிடைத்தது என்பதை அரசு குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கின்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.