Skip to main content

எழும்பூரில் தூர்வாரும் பணிகளை துவங்கி வைத்த எம்.எல்.ஏ. ஹரி பரந்தாமன்!

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

சேத்துப்பட்டு மேம்பாலம் அருகே பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகள் இன்று (24.06.2021) காலை சென்னை குடிநீர் வாரியம் சார்பாக நடைபெற்றது. இந்தப் பணிகளை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஹரி பரந்தாமன் கொடியசைத்து துவக்கிவைத்தார். பின்னர் தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்தார்.

 

அதன்பின்பு செய்தியாளருக்குப் பேட்டியளித்த அவர் பேசியதாவது, “எதிர்வரும் பருவ மழைகளை முன்னிட்டு இயற்கை பேரிடர் மற்றும் வெள்ளம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று தமிழ்நாடு முதல்வர் தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையின் அடிப்படையில் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாய்களைத் தூர்வார வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மழை நேரங்களில் கழிவுநீர் வடிந்து தேக்கம் ஏற்படாமல் இருக்கும் என்று கூறினார். முதல்வரின் அறிவுரைப்படி எழும்பூர் சட்டமன்றத்திற்குட்பட்ட வார்டு எண் 104, 107 ஆகிய வார்டுகளில் தூர்வாரும் பணியைத் துவங்கும் பொருட்டு அமைச்சர் பி.கே. சேகர் பாபு முன்னிலையில் தூர்வாரும் பணியினைத் துவங்கிவைத்துள்ளோம்.

 

எல்லா சாலைகளிலும் உள்ள மேன்ஹோலைத் திறந்து அதிலிருக்கும் கழிவுகளைத் தூர்வாரி பிறகு பிரஷர் பம்புகள் மூலமாக வெளியே பாய்ச்சி உள்ளே இருக்கும் கழிவுகள், அடைப்புகளை நீக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டிருக்கின்றனர். இவ்வாறு செய்வதனால் மழை நேரங்களில் கழிவுநீர் வீடுகளுக்குள் செல்லாமல் தடுக்கப்படும். இதனால் மழை நேரங்களில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதோடு, சுகாதாரமான சூழல் ஏற்படும்” என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்