MLA Ezhilarasan pushed the government bus into ditch

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகே உள்ள கீழ்கதிர்பூர் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு புதிய நகர்ப் பகுதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரத்தை சுற்றி பல்வேறு பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றிய பிறகு, அங்கு வசித்து வந்த குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, அந்த மக்கள் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள்அங்கிருந்துகாஞ்சிபுரம் பகுதிக்குச் சென்று வருவதற்கு போதிய அளவில் போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். இதையடுத்து, தங்கள் பகுதியில் புதிதாக அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசனிடம் கோரிக்கை வைத்தனர்.

அப்போது, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏஎழிலரசன் தமிழக அரசின் அனுமதியுடன் அந்த வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், இதன் தொடக்க விழாவும் தற்போது நடைபெற்றது. அப்போது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் மற்றும் எம்.எல்.ஏ எழிலரசன் ஆகியோர் புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Advertisment

இதையடுத்து, எழிலரசன் அந்த அரசுப் பேருந்தை சிறிது தூரம் ஓட்டி காட்டிய போது , திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்கி அங்கிருந்த மின் கம்பத்தில் சாய்ந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், பதறியடித்துக் கொண்டு ஓடியபடி பேருந்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக கீழே இறக்கிய நிலையில், அதிலிருந்த எம்.எல்.ஏ எழிலரசன் கடைசியாக கீழே இறங்கினார். பின்னர், அங்கிருந்த ஓட்டுநர் ஒருவர், பள்ளத்தில் சிக்கிய பேருந்தை பொதுமக்கள் உதவியுடன் பாதுகாப்பாக எடுத்துச் சென்றார். தற்போது இதுதொடர்பான வீடியோ காட்சிகள்மக்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.

- சிவாஜி