திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் வட்டம், சேமலைக்கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் கொலை சம்பவத்தில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் வட்டம், சேமலைக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள் மற்றும் மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் தோட்டத்து வீட்டில் மர்ம நபர்களால் நேற்று முன்தினம்(28.11.2024) நள்ளிரவில் கொடூரமான முறையில் வெட்டி கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகவும் மன வேதனை அளிக்கிறது.
காவல்துறை தனிப்படை அமைத்து இந்த கொடூர சம்பவங்களை செய்த குற்றவாளிகளை மிக விரைவில் கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இதே போன்று கொலை சம்பவங்கள் பலமுறை நடந்தேறி இருக்கிறது. இப்பகுதிகளில் காவல்துறைக்கு பல வருடங்களாக இருந்து வருகின்ற கோரிக்கை புறநகர் காவல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்பது. இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றால் கூடுதலாக காவல் நிலையங்களை அமைக்க வேண்டும்.
ஏனென்றால் திருப்பூர் மாவட்டத்தில் வட மாநிலத்தவர்கள் மற்றும் தென் மாவட்ட பகுதியை சேர்ந்தவர்கள் அதிகமாக தங்கி வேலை பார்க்கிறார்கள். இந்த மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ளதால் குற்ற செயல்கள் எளிதாக நடைபெறுகிறது. மேலும் காவல்துறையில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் போன்ற அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால் புதிதாக வரும் காவல் அதிகாரிகள் இப்பகுதிகளை பற்றி முழுமையாக அறிந்து செயல்படுவதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் இப்பகுதிகளில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பணியாற்ற வேண்டும். அப்பொழுதுதான் இப்பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதாக கண்டறிந்து முன்கூட்டியே குற்ற செயல்களை தடுக்க முடியும்.
அதுமட்டுமில்லாமல் திருப்பூர் மாவட்டத்தில் உளவுத்துறையை பலப்படுத்த வேண்டும். இதுபோன்ற குற்றச்செயல்கள் இனி வரும் காலங்களில் நடக்காமல் இருக்க காவல்துறை விழிப்போடு செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.