mla chinnadhurai said 11 POCSO cases two months gandarvakottai

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை (சி.பி.எம்) தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் முதல் கடந்த ஆண்டு வரை இந்தப் பள்ளியில் படித்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களின் பள்ளிப் பருவ சம்பவங்களை நினைவூட்டி நெகிழ்ந்தனர். பலரும் தாங்கள் படித்த வகுப்பறைகளை தேடிப் பார்த்துவிட்டு, நாங்க படிச்ச ஓட்டுக்கட்டிட வகுப்பறைகளை காணவில்லை என்றனர்.

இன்னும் பலர் பல வருடங்களுக்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சியில் கட்டியணைத்துக் கொண்டு தங்கள் குடும்பங்கள் பற்றி பேசிக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மருத்துவர்கள், கல்வி அதிகாரிகள் என பல துறைகளிலும் வேலை செய்து ஓய்வு பெற்றவர்களும் வந்திருந்தனர். நாம் படித்த பள்ளியை மேலும் மாவட்டத்தின் முன்மாதிரி பள்ளியாக வளர்க்க வேண்டும் அதற்கு நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றனர்.

ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி,“பள்ளிகளின் தேவைகளை எல்லாம் அரசு நிறைவேற்றிட முடியாது. ஆனால் அதை நிறைவேற்ற நாம் இருக்கிறோம் (முன்னாள் மாணவர்கள்). நம்மால் முடியும் என்பதை திட்டமிட்டு செய்வோம். ஊருக்கு ஒரு பிரதிநிதி நியமித்து தகவல்களை கொண்டு போய் சேர்ப்போம்.இந்த தகவல்களை கொண்டு போக இந்தியாவில் இன்று வரை விலை ஏறாத போஸ்ட் கார்டுகளை பயன்படுத்துவோம். இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக நான் ரூ.1 லட்சம் தர தயாராக இருக்கிறேன்” என்றார்.

Advertisment

இந்த நிகழ்வை தலைமையேற்றிருந்த சின்னத்துரை எம்.எல்.ஏ,“கல்வி வளர்ச்சிக்காக இந்த அரசாங்கம் நிறைய செய்து வருகிறது. நான் எதிர்கட்சி எம்.எல்.ஏ என்று சொன்னார்கள். இல்லை இல்லை ஆளும் திமுகவினர்கள் ஆதரவில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றுள்ளேன். சட்டமன்ற உறுப்பினர் நிதியில் 30% கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கூறியிருப்பது சிறப்பாக உள்ளது. முதல்கட்டமாக சுற்றுச்சுவர் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.ஆனால் ஒரு வருத்தமான செய்தி கடந்த 2 மாதங்களில் மட்டும் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இதற்கு காரணம் மாணவர்கள் இடைநிற்றலும் ஒன்று. அதனை மாற்றி கீரமங்கலம் பகுதியை போல படிப்பை கொடுத்து முன்னேற்றம் செய்ய வேண்டும். அதற்கு முதலில் முன்னாள் மாணவர்கள் சபதம் ஏற்போம்” என்றார்