சம்பிரதாயத்தை உடைத்தெறிந்த எம்.எல்.ஏ.... பலரும் பாராட்டும் பாமக சட்டமன்ற உறுப்பினர்!!

The MLA who broke the tradition .... Member of the Legislative Assembly praised by many !!

மயிலம் சட்டமன்ற உறுப்பினராக சமீபத்தில் வெற்றிபெற்றவர் பாமகவைச் சேர்ந்த சிவக்குமார். இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மைலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இதே போன்று ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவரவர் தொகுதியில் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு எம்.எல்.ஏ. வருகை தந்து மக்கள் குறைகேட்பு நடத்துவது, மக்கள் பணி செய்வது பற்றி ஆலோசிப்பது ஆகியவை நடைபெற வேண்டும்.

பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் பூட்டப்பட்டே கிடந்தன. தற்போது வெற்றிபெற்றுள்ள பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் அந்த அலுவலகங்களைப் புதுப்பித்து திறப்புவிழா நடத்தி அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். அதன்படி மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், தமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைப் புதுப்பிக்கச் செய்து, அப்பகுதியில் உள்ள முன்களப்பணியாளர்கள் கைகளால் ரிப்பன் வெட்டி திறப்புவிழா நடத்தினார். பொதுவாக அரசு சார்ந்த கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டதும் அவற்றுக்கு திறப்புவிழா நடத்தும்போது அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் என இப்படிப்பட்டவர்களைக் கொண்டுவந்து அவர்கள் கைகளால் குத்துவிளக்கேற்றி திறந்துவைப்பது சம்பிரதாயம்.

அதை உடைத்தெறிந்து முன்களப்பணியாளர்களை வைத்து தனது அலுவலகத்தைத் திறப்புவிழா செய்த எம்.எல்.ஏ சிவக்குமாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைப் புதுப்பித்து திறப்புவிழா நடத்தினால் மட்டும் போதாது. ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற அலுவலகங்கள் பயன்பாட்டில் இல்லாமல் பூட்டப்பட்டிருந்தன. அதனால் தொகுதி மக்கள் தங்கள் பிரச்சினைகளை எம்.எல்.ஏக்களை சந்தித்து கூறுவதற்காகவும் எழுத்து மூலமாக மனு அளிப்பதற்காகவும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேடி அலைந்தனர். எங்கு இருப்பார், எப்போது வருவார் என்று பல நாட்கள் காத்திருந்த சம்பவங்களும் உண்டு. அதுபோன்று இல்லாமல்இனிவரும் காலங்களில் அவரவர் தொகுதியில் உள்ள அலுவலகங்களில் அமர்ந்து மக்கள் பணி செய்ய வேண்டும். இதை அனைத்து எம்.எல்.ஏக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

pmk Tindivanam
இதையும் படியுங்கள்
Subscribe